கோபி, ஏப்.22: பெங்களூருவில் நடைபெற்ற பிராமண மாநாட்டில் இன ஒதுக்கல் கருத்தை வலியுறுத்தி பேசிய காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியை கண்டித்து கோபி பேருந்து நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் பெங்களூருவில் நடைபெற்ற பிராமண மாநாட்டில் கலந்து கொண்ட காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி, சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட இன ஒதுக்கல் என்ற சட்ட விரோத கருத்தை வலியுறுத்தியும், விளிம்பு நிலை மக்களுடன் பிராமணர்கள் கலந்து வசிக்க கூடாது என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சி சங்கராச்சாரியார் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதியை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கோபி பேருந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் செல்வக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில வெளியீட்டு செயலாளர் இளங்கோவன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் நாத்திக சோதி, ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி ரமேஷ், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குணசேகரன், தமிழர் உரிமை கழக கந்தசாமி, திவிக நிர்வாகிகள் நிவாஷ், ஜெகநாதன், அருள் ஆனந்தம், தாமோதரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு, விஜயேந்திர சரஸ்வதியை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
The post காஞ்சி சங்கராச்சாரியாரை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.