சத்தியமங்கலம், ஏப். 17: பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தொட்டம்பாளையம் கிராமத்திற்கு பவானிசாகரில் இருந்து செயல்படுத்தப்படும் தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை பவானிசாகர் – சத்தியமங்கலம் சாலையில் தொட்டம்பாளையம் ரேடியோ ரூம் பஸ் ஸ்டாப் அருகில் காலி குடங்களுடன் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் appeared first on Dinakaran.