ஈரோடு, ஏப். 12: ஈரோடு மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், விடுமுறை தினத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறதா என சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு போலீசார் நேற்று தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது, மது விற்பனையில் ஈடுபட்டதாக சோலார் கரூர் சாலையில் சின்னையன் (66), கருங்கல்பாளையம் கேஏஎஸ் நகரில் ஆறுமுகம் (67), கமலா நகரில் சக்திவேல் (37), சத்தி ஆலத்துகோம்பையில் முருகன் மனைவி சுமதி (47), கோட்டுவீரம்பாளையத்தில் மணிகண்டன் (30), ராமாபுரத்தில் ரங்கசாமி (60), குணசேகர் (29), ஜெஜெ நகரில் ராமாத்தாள் (60), பவானிசாகர் பசுவபாளையத்தில் சிவக்குமார் (50) என மொத்தம் 7 பெண்கள் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 932 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்றதாக 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
The post மகாவீர் ஜெயந்தி விடுமுறையில் மது விற்ற 33 பேர் கைது appeared first on Dinakaran.