தையூர், கேளம்பாக்கம் ஊராட்சிகளில் வீராணம் கால்வாயை தூர் வார வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர், மார்ச் 25: தையூர், கேளம்பாக்கம் ஊராட்சிகளில் வீராணம் கால்வாயை தூர் வாரவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய தையூர் மற்றும் கேளம்பாக்கம் ஊராட்சிகளில் ஓஎம்ஆர் சாலையில் இருந்து வண்டலூர் சாலைக்கு செல்ல வீராணம் சாலை மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீராணம் சாலையை ஒட்டி வீராணம் கால்வாய் செல்கிறது. மழைக்காலங்களில் தையூர் ஏரியில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் இந்த கால்வாய் வழியாகவும் சென்று ஓஎம்ஆர் சாலையை சென்று அடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறையினர் இந்த கால்வாயை தூர் வாரும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

மழைக்காலங்களில் தையூர் ஏரியில் இருந்து வரும் உபரி நீரின் காரணமாக இந்த கால்வாயில் பல்வேறு கழிவுப்பொருட்களும் அடித்து வரப்பட்டு ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும், கால்வாயில் கோரைப் புற்களும், செடி, கொடிகளும் அதிக அளவில் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும், இந்த கால்வாயை ஒட்டி உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகங்கள், ஓட்டல்கள், வீடுகள் ஆகியவற்றில் இருந்து கழிவுநீர் இந்த கால்வாயில் விடப்படுகிறது. இதன் காரணமாக வீராணம் கால்வாயில் சாக்கடை ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், இந்த கால்வாயில் ஆங்காங்கே கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் உணவுக்கழிவுகள், எச்சில் இலைகள், பிளாஸ்டிக் பேப்பர்கள், காய்கறி கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக தையூர் வீராணம் கால்வாய் கூவம் ஆறு போல காட்சி அளிக்கிறது. இதில் கொசு உற்பத்தியாகி அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தையூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் இந்த கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியாத நிலை உள்ளது. மேலும், சில அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் தொட்டிகளில் இருந்து இரவு நேரங்களில் மொத்தமாக கழிவுநீர் இக்கால்வாயில் திறந்து விடப்படுகிறது. ஆகவே, தையூர் மற்றும் கேளம்பாக்கம் ஊராட்சி நிர்வாகங்கள் இந்த வீராணம் கால்வாயில் கழிவுநீரை விடுபவர்கள் மீதும், குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவோர் மீதும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வீராணம் கால்வாயில் உள்ள கழிவுகள், கோரைப்புற்கள், செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்ற பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தையூர், கேளம்பாக்கம் ஊராட்சிகளில் வீராணம் கால்வாயை தூர் வார வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: