இலவச கழிப்பறையால் மாதம்தோறும் ரூ.3000 சேமிக்கும் தொழிலாளர்கள்

 

வளசரவாக்கம், மார்ச் 24: கோயம்பேட்டில் உள்ள காய்கறி, பூக்கள், பழம் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கழிப்பறைகளும் வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதையடுத்து அங்காடி நிர்வாகம், புதிய ஒப்பந்ததாரர்களை நியமித்து அனைத்து கழிப்பிடங்களையும் சுத்தம் செய்து தண்ணீர் வசதிக்காக மோட்டார்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் நவீன இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மார்க்கெட்டில் தங்கியிருந்து வேலை பார்த்துவரும் தொழிலாளர்கள் கூறியதாவது: மாலையில் பணி முடிந்து மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிவறையில் குளிக்க செல்லும்போது பெரும்பாலான கழிவறைகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் சரியாக வருவது கிடையாது. ஒரு நபருக்கு குளிப்பதற்கு கட்டணமாக ரூ.50, சிறுநீர் கழிப்பதற்கு 5 ரூபாய், மலம் கழிக்க 10 ரூபாய் என வசூலித்தனர்.

அனைத்து கழிப்பறைகளும் இலவசமாக மாற்றவேண்டும் என்று வைத்து கோரிக்கையையடுத்து இலவசமாக பயன்படுத்த தமிழக அரசு அறிவித்தது. அத்துடன் கழிப்பறைகள் இலவசம் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் வசதிக்காக புதிய மோட்டார் பொருத்தப்பட்டு சுத்தம் செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதன்மூலம் எங்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும். எனவே, இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு தெரிவித்தனர்.

The post இலவச கழிப்பறையால் மாதம்தோறும் ரூ.3000 சேமிக்கும் தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: