சேலம், மார்ச் 21: சேலம் பள்ளப்பட்டி குப்தாநகர் 9வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மீனா (55). இவர், 15 மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த மாடுகளை தனது வீட்டின் முன்பு கட்டி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மாடுகளை கட்டி வைத்துவிட்டு, வீட்டிற்குள் தூங்கச் சென்றார். நேற்று அதிகாலை பால் கறப்பதற்காக வெளியே எழுந்து வந்தார். அப்போது, சினை மாடு, கழுத்து மற்றும் பின்பகுதியில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தது. நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிந்துள்ளது. அந்த நாய்கள், சினை மாட்டை கடித்து குதறி கொன்றிருக்கலாம் என சந்தேகம் கொண்டுள்ளனர். ஏற்கனவே அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள், மீனாவின் வீட்டில் கட்டியிருக்கும் மாடுகளை விரட்டி வந்துள்ளன. அதனால், அந்த நாய்களை பிடித்து செல்லும்படி மாநகராட்சி அதிகாரிகளிடம் மீனா புகார் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தான், நாய்கள் கடித்து சினை மாடு இறந்துள்ளது. அதனால், அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறி பிடித்த தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நாய்கள் கடித்து குதறியதில் சினை மாடு உயிரிழப்பு appeared first on Dinakaran.