சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

சேலம், மார்ச் 18: சேலம் 4 ரோடு அடுத்த அவ்வையார் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சுமதி (40). நேற்று தனது 2 குழந்தைகளுடன், கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென கேனில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை, தன் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

அப்போது சுமதி கூறுகையில், ‘‘எனது தாத்தாவுக்கு சொந்தமாக பூர்வீக நிலம் உள்ளது. இதில் எனது பங்கை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறேன். ஆனால் எனது உறவினர்கள் சிலர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் விற்பனை செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது மிரட்டல் விடுத்தனர். தற்போது எனது மகனுக்கு உடல்நலம் சரியில்லை. பொருளாதார சூழ்நிலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறேன். எனவே நிலத்தை விற்பனை செய்ய உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்,’’ என்றார். இதையடுத்து போலீசார் அவரை கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

The post சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: