ஓமலூர், மார்ச் 21: ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோயில் நேற்று எருதாட்டம் நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற விழாவில், இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோயிலில் முதல் முறையாக எருதாட்டம் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட காளைகளை மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து கோயில் முன்பாக காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து எருதாட்டம் நடந்தது. காளைகளை வரிசையாக ஓடவிட்டனர். இழுத்துக்கொண்டு சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை, மாடுபிடி வீரர்கள் இழுதுப்பிடித்து துரத்திச்சென்றனர்.
ஓமலூர் எஸ்ஐ சையத் முபாரக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பார்வையாளர் பாதுகாப்பிற்கு தட்டி கட்டப்பட்டு எருதாட்டம் நடத்தப்பட்டது. ஒரு காளைக்கு 20 வீரர்கள் வீதம் 2 குழுக்களாக 2 புறமும் வடம்கட்டி மாட்டை களத்தில் ஓட விட்டனர். இதில் காளைகள் 20 இளைஞர்களையும் இழுத்து கொண்டு ஆக்ரோஷமாக துள்ளி குதித்து ஓடியது. ஒரு சில காளைகளை இளைஞர் தங்கள் கட்டுப்பாட்டில் அடக்கினர். களத்தில் நுழைந்த நாய் ஒன்று, காளைகளை விரட்டி சென்றது மக்களை மகிழ்ச்சியடைய செய்தது. இதில், களத்தில் நின்று விளையாடிய காளை மற்றும் காளையர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. எருதாட்டத்தை காண ஓமலூர், தாரமங்கலம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
The post திரவுபதி கோயிலில் எருதாட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.