கடும் வறட்சி எதிரொலி: டாப்சிலிப் முகாமில் பராமரிக்கப்படும் 26 வளர்ப்பு யானைகள் இடமாற்றம்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் (ஏடிஆர்) தண்ணீர் மற்றும் இயற்கை தீவனம் பற்றாக்குறையால் அங்குள்ள 26 வளர்ப்பு யானைகளை 4 முகாம்களுக்கு பிரித்து அனுப்ப வனத்துறை முடிவு செய்துள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதமாக கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. வனப்பகுதியையும் வெயில் விட்டு வைக்கவில்லை. கோடை வெயில் நாளுக்குநாள் அதிகரிப்பதாலும், மாவட்டத்தில் 89 சதவீதம் மழை பற்றாக்குறை காரணமாகவும், பொள்ளாச்சி அருகே ஆனைமலை டாப்சிலிப்பில் உள்ள இந்தியாவின் பழமையான யானைகள் முகாமில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாம், நீராதாரமின்றி காய்ந்து வருகிறது.

இது, வனத்துறை அதிகாரிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இம்முகாமில், 26 வளர்ப்பு யானைகள், வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு, யானை பாகன் மற்றும் யானை பராமரிப்பு ஊழியர்களுக்கு தமிழகஅரசு சார்பில் பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகிறது. அதற்கான, கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. அதனால், இங்குள்ள யானைகள் நான்கு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதாவது, வரகளியாற்றில் 10 யானைகள், சின்னாரில் 6 யானைகள், மானம்பொலியில் 5 யானைகள், கோழிகமுத்தி முகாமில் இருந்து சிறிது தூரத்தில் 5 யானைகள் பராமரிக்கப்படுகின்றன.தற்போது, கோடை காரணமாக ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் மற்றும் கட்டுமான பணிகள் ஆகியவை இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. அதனால், இங்குள்ள யானைகளை வேறு முகாம்களுக்கு இடமாற்றம் செய்ய, வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ தேஜா கூறியதாவது: இங்குள்ள சின்னாரும், மானம்பொல்லியும் நல்ல நீர் ஆதாரங்களை கொண்டிருக்கின்றன. மேலும் அவை சரியான வாழ்விடமாகவும் உள்ளன. எனவே, இங்கு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன. சில மாதங்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தை மாற்ற வனத்துறை முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை மாதத்திற்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விடும். மழை பெய்து, தண்ணீர் நிலைமை சீரானதும், பழைய இடத்திற்கே இம்முகாம் மாற்றப்படும்.

நவமலையில் மற்றொரு தற்காலிக யானை முகாம் துவக்கும் திட்டம் இருந்தது. ஆனால், அது கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு முகாம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி ஆகியவை இந்தியாவின் பழமையான யானைகள் முகாம்கள் ஆகும். இங்கு, சிறந்த யானை பராமரிப்பாளர்கள் உள்ளனர்.

இந்த இரண்டு யானைகள் முகாம்களிலும் 91 யானை பராமரிப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். `தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றதையடுத்து, 91 ஊழியர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி, முதல்வர் அறிவித்தார். 91 ஊழியர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் கலாச்சாரத்துக்கு ஏற்ற வீடுகள் ரூ.9.1 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. மேலும், ரூ.5 கோடி செலவில் கோழிக்கமுத்தி முகாம் மேம்படுத்தப்படுகிறது. இப்பணிகள் விரைவில் நிறைவுபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கடும் வறட்சி எதிரொலி: டாப்சிலிப் முகாமில் பராமரிக்கப்படும் 26 வளர்ப்பு யானைகள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: