கோடை விடுமுறைக்கு வெளியூர்களுக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து கூடுதலாக 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள்: பயணிகள் உற்சாகம்

* 11,405 கடந்த 2022 மே மாதம் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை

* 11,708 கடந்த 2023 மே மாதம் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை

சென்னை: கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள், கோடை ஸ்பெஷலாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கோடை விடுமுறையையொட்டி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது. இதையொட்டி கோடைகால விமான போக்குவரத்து கால அட்டவணை செயல்பட தொடங்கியுள்ளது. சென்னை- தூத்துக்குடிக்கு இதுவரை 3 புறப்பாடு, 3 வருகை என 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், திருச்சிக்கு இதுவரை 4 புறப்பாடு, 4 வருகை என 8 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், அது 12 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

கோவைக்கு தினமும் 12 இயக்கப்பட்டது 16 ஆகவும், மதுரைக்கு 10 ஆக இருந்தது 14 விமானங்களாகவும், பெங்களூருக்கு 16 விமானங்கள் என்பது 22 ஆகவும், ஐதராபாத்துக்கு 20 என்பது 28 ஆகவும் இயக்கப்படுகின்றன. டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும், கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை- துர்காப்பூர் இடையே புதிதாக வாரத்தில் 3 நாள் நேரடி விமான சேவைகள், வரும் 16ம்தேதி முதல் தொடங்குகின்றன.

சென்னை- பாரிஸ்- சென்னை இடையே, ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம், இதுவரை வாரம் 3 நாள் விமான சேவைகளை இயக்கியது, கோடை விடுமுறை பயணிகள் கூட்டம் காரணமாக வாரத்திற்கு 5 நாள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மே 15ம் தேதியில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க உள்ளது.

மொரீசியஸ் தீவுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட ஏர் மொரீசியஸ் பயணிகள் விமானம், ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் ஓட தொடங்கியுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, லண்டன் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது. இந்த கோடை ஸ்பெஷல் விமானங்களாக, சென்னை விமான நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட கூடுதல் மற்றும் புதிய விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

இது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2023 மே மாதத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 18,90,638. கடந்த 2022 மே மாதம் இது 17,42,607 ஆக இருந்தது. சுமார் ஒன்றரை லட்சம் பயணிகள் அதிகரித்துள்ளனர். இந்த 2024ம் ஆண்டு மே மாதத்தில் இது சுமார் 3 லட்சம் வரை அதிகரித்து, 21 லட்சம் பயணிகள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022 மே மாதம் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 11,405. 2023ல் 11,708 ஆக, 303 விமானங்கள் அதிகமாக இயக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே மாதம் 400 விமானங்கள் வரை அதிகமாக இயக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது. இவற்றுக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படாதது பயணிகளின் மகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

The post கோடை விடுமுறைக்கு வெளியூர்களுக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து கூடுதலாக 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள்: பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: