(24.4.2025 முதல் 30.4.2025 வரை)
சாதகங்கள்: இதுவரை பத்தாம் இடத்திலிருந்து ராசிநாதன் புதன், வார மத்தியில் 11-ஆம் இடத்திற்கு வந்து சூரியனோடு சேர்ந்து யோகம் செய்கின்றார். இது அற்புதமான நிலை. எதையும் நுட்பமாகச் செய்து வெற்றி பெறும் வாய்ப்பினைத் தரும். பத்தாம் இடத்தில் இருந்த ராகு பாக்கிய ஸ்தானத்திற்கு இடம் மாறுவதும் சிறந்த அமைப்பு. சுகஸ்தானத்தில் இருந்த கேது உப ஜெய ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு வருவது சிறப்பான பலனைத் தரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். தொழிலில் இருந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தீரும். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்போருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
கவனம் தேவை: இரண்டாம் இடத்தில் செவ்வாய் நீசம். வாக்கு ஸ்தானம் பலவீனம் பெற்றிருப்பதால், யாரிடமும் வீண் வாதம் செய்ய வேண்டாம். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரி ஆகிவிடும். சகோதர உறவுகள் கெடும். சின்ன சின்ன சறுக்கல்கள் உண்டு. குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதாலும் நீசத்தில் இருப்பதாலும் சனியைப் பார்ப்பதாலும் கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் அதிகரிக்கும். இடம் பூமி விற்பதில் சிக்கல் உண்டு.
பரிகாரம்: குலதெய்வக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். மஹான்களின் அதிஷ்டானம் (சமாதி) சென்று ஐந்து நிமிடமாவது தியானத்தில் அமருங்கள்.