சென்னை: இன்று திரைக்கு வரும் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தை சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஸ்ரிகாரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது. சென்னையில் நடந்த பட விழாவில் விஜய் தேவரகொண்டா பேசியது: இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையை சொன்னபோது, அவரது ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற வரவேற்பை நினைவூட்டினார். ஆரம்பத்திலிருந்தே, இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்காகவே செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்.
இது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தொடங்கி, பிறகு இலங்கையிலும் நடைபெறும் கதையாகும். இவை அனைத்தும் ஒரே மாதிரியான கலாசாரம் மற்றும் உணர்வுகளை பகிர்கின்றன. இந்தப் படம் உணர்வுகளும் அதிரடியும் கலந்த ஒன்று. அது ரஜினிகாந்த் சார் படங்களை போலவே ஒரு சூழலை உருவாக்கும். ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் படத்திற்கான புரமோஷன்கள் நடந்தாலும், தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே நான் வந்து புரமோட் செய்வதென்றால், அது சென்னை மட்டுமே. எனக்கு உங்களை (தமிழ் ரசிகர்களை) அவ்வளவு பிடிக்கும்.
