தியேட்டரில் திடீரென்று உயிரிழந்த ரசிகர்

தியேட்டரில் படம் பார்க்கும்போது, திடீரென்று ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐதராபாத்தில் குக்கட்பல்லி பகுதியில் இருக்கும் ஒரு தியேட்டரில் நேற்று இச்சம்பவம் நடந்து இருக்கிறது. அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நயன்தாரா, கேத்தரின் தெரசா நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ என்ற படம், சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நேற்று திரைக்கு வந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இப்படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த ஆனந்த் குமார் என்ற ரசிகர், படம் திரையில் ஓடிக்கொண்டு இருக்கும்போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இருக்கையிலேயே சரிந்து விழுந்தார்.

தகவல் அறிந்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். உடனே வந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில், அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிரஞ்சீவி படத்துக்கு வந்த ரசிகர் ஒருவர் திடீரென்று மரணம் அடைந்த சம்பவம், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: