சென்னை: மலையாள சினிமாவின் மெகா ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மம்மூட்டி. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகள் என சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். மம்மூட்டிக்கு 73 வயதாகிறது. ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட் ஆகி நடிப்பதை வழக்கமாகக் கொண்ட இவர் அண்மைக்காலமாக எந்தப் படங்களிலும் புதிதாக ஒப்பந்தம் செய்யவில்லை. மம்மூட்டிக்கு அண்மையில் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவி வந்தன.
இதனால் சிறிது காலம் ஓய்வெடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே புதிய படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளன. மம்மூட்டி குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சென்னையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே சினிமாவுக்கு பிரேக் தர அவர் முடிவு செய்துள்ளார்.
கடைசியாக மம்மூட்டி நடிப்பில் ‘டாமினிக் தி லேடீஸ் பர்ஸ்’, ‘பசூகா’ ஆகிய இரண்டு படங்கள் வௌியாகின. தொடர்ந்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லால் உடன் இணைந்து ‘பாட்ரியாட்’ படத்தில் மம்மூட்டி நடித்து வந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து மம்மூட்டி நடித்து வந்தார்.
இதில் மம்மூட்டி நடிக்கும் புகைப்படங்களும் வெளியாகின. நயன்தாராவும் இந்த படத்தில் நடிக்கிறார். இப்போது இந்த படத்திலிருந்தும் தற்காலிகமாக மம்மூட்டி விலகியுள்ளார். உடல் நலம் தேறிய பிறகே அதில் நடிப்பாராம். தொடர் சிகிச்சையில் இருக்கும் மம்மூட்டிக்கு ஓய்வு தேவை என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனாலேயே அவர் நடிப்பதை சில காலத்துக்கு நிறுத்தி வைக்க இருக்கிறார்.
