விருத்தாசலம் அருகே பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மூதாட்டியை கொல்ல முயன்ற வாலிபருக்கு குண்டாஸ்

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு மூதாட்டியை கொலை செய்ய முயன்ற வாலிபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே ஆலந்துறைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி பாவாயி (57). இவர் கடந்த மாதம் 10ம் தேதி அப்பகுதியில் உள்ள கருவேலங்காட்டில் ஆடுகளை மேய்க்க சென்றார்.

அப்போது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது மது போதையில் வந்த கம்மாபுரம் அருகே உள்ள சு.கீணனூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் ஐயப்பன்(21)பாவாயியை வாயை பொத்தி கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் இதனை வேறு யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் பாவாயி கொடுத்த புகாரின்பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், ஐயப்பன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து இவரின் தொடர் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில், கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஐயப்பனை ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க உத்தரவிட்டதன்பேரில் அவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இதற்கான நகல் சிறையில் இருக்கும் ஐயப்பனிடம் நேற்று வழங்கப்பட்டது.

The post விருத்தாசலம் அருகே பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மூதாட்டியை கொல்ல முயன்ற வாலிபருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Related Stories: