புதிய முதல்வர் தேர்வில் பா.ஜ மும்முரம் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி விலக்கப்படுகிறதா?

இம்பால்: புதிய முதல்வர் தேர்வில் பா.ஜ மும்முரம் காட்டி வருவதால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி விலக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் முதல் இரு பழங்குடியின சமூகங்கள் இடையே நடந்து வரும் மோதலில் இதுவரை 260க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். அங்கு முதல்வராக இருந்த பிரேன்சிங் தனது பதவியை கடந்த பிப்.13 அன்று ராஜினாமா செய்தார். 2027ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை பதவிக்காலம் இருந்தும், அங்கு நடந்து வரும் கலவரத்தால் சட்டப்பேரவை திடீரென முடக்கி வைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தற்போது மணிப்பூரை சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு தனித்தனியாக கடிதங்கள் எழுதியுள்ளனர். அதில் மணிப்பூரில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசை நிறுவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து மணிப்பூர் மாநில பா.ஜ பொறுப்பாளர் சம்பித் பத்ரா நேற்று மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றார். இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள லுவாங்ஷாங்பாமில் உள்ள முன்னாள் முதல்வர் பிரேன்சிங்கை அவரது இல்லத்தில் சம்பித் பத்ரா சந்தித்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பூட்டிய அறையில் இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது சில பா.ஜ எம்எல்ஏக்களும் உடன் இருந்தனர். அதை தொடர்ந்து சபாநாயகர் தோக்சோம் சத்யபிரதா சிங்கை, பாமோன் லெய்காயில் உள்ள அவரது இல்லத்தில் சம்பித் பத்ரா சந்தித்தார். மேலும் அவர் தங்கிய ஓட்டலில் மேலும் பல பா.ஜ எம்எல்ஏக்களை சந்தித்து பேசினார். இதையடுத்து மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி விலக்கப்பட்டு, பா.ஜ சார்பில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ராஜினாமா செய்த பிரேன்சிங்கிற்கு பதிலாக புதிய முதல்வராக தோக்சோம் சத்யபிரதா சிங் தேர்வு செய்யப்படலாம் என்று பா.ஜ என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

 

The post புதிய முதல்வர் தேர்வில் பா.ஜ மும்முரம் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி விலக்கப்படுகிறதா? appeared first on Dinakaran.

Related Stories: