சிம்கார்டு விற்ற பட்டதாரியை கைது செய்த டெல்லி சிபிஐ

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே சிகரமாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராமுலு மகன் சதாசிவம் (25). பி.இ. பட்டதாரியான இவர், வேப்பனஹள்ளியில் கொங்கானப்பள்ளி சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக செல்போன் மற்றும் உதிரிபாகங்கள், சிம் கார்டுகள் விற்பனை மற்றும் ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சிகரமாகனப்பள்ளி கிராமத்தில் உள்ள சதாசிவம் வீட்டிலும், வேப்பனஹள்ளியில் உள்ள கடையிலும், பெங்களூரு சிபிஐ டிஎஸ்பி சாய்கிரண் தலைமையில், புதுடெல்லியை சேர்ந்த சிபிஐ போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர் 2 பிரிவுகளாக அதிரடி சோதனை நடத்தினர்.

கடை மற்றும் வீட்டில் மாலை 5.30 மணி வரை தொடர் விசாரணை நடந்தது. பின்னர், கடையில் இருந்து ஒரு லேப்டாப், 3 செல்போன்களை கைப்பற்றிய போலீசார், சதாசிவத்தை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், விசாரணைக்காக புதுடெல்லிக்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக சிபிஐ போலீசார், வேப்பனஹள்ளி போலீசாருக்கும், சதாசிவத்தின் குடும்பத்தினருக்கும் கைது அறிவிப்பு கடிதத்தை வழங்கினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சதாசிவம் கடைக்கு வந்த மர்மநபர் ஒருவர், போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கியுள்ளார். அந்த எண் மூலம் பல்வேறு மோசடி பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நீதிமன்றத்தில் தேடுதல் உத்தரவு பெற்று சதாசிவத்தின் வீடு, கடைகளில் சோதனை நடத்தி, அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து செல்கிறோம் என தெரிவித்தனர்.

The post சிம்கார்டு விற்ற பட்டதாரியை கைது செய்த டெல்லி சிபிஐ appeared first on Dinakaran.

Related Stories: