தர்மபுரி அருகே பரபரப்பு பிளேடால் 9 மாத குழந்தை கையை அறுத்துக்கொன்ற தாய் தற்கொலை

*கணவனுடனான தகராறில் சோக முடிவு

பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொம்மிடி வடசந்தையூர் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் (27). இவர், போட்டோ ஸ்டூடியோவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த ஜானிபாஷா மகள் தஸ்லீம்பானு (20) என்பவருக்கும், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 மாதத்தில் ஆத்தீப் என்ற ஆண் குழந்தை இருந்தது.

இந்நிலையில், கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு வரும்போது தஸ்லீம்பானு கோபித்துக்கொண்டு மஞ்சவாடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதேபோல், கோபித்துக்கொண்டு தாய் வீட்டில் இருந்த தஸ்லீம்பானுவிடம், பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தினர். பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார்.

இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி சென்றிருந்த அக்பர் நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அவர் நீண்டநேரமாக தட்டியும் தஸ்லீம்பானு கதவை திறக்கவில்லை.

இதனால், சந்தேகமடைந்த அக்பர் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு தஸ்லீம்பானு தூக்கில் தொங்குவது தெரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்பர் கதவை உடடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

அங்கு குழந்தை ஆத்தீப் இடது கை மணிக்கட்டில் பிளேடால் அறுக்கப்பட்டு ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்து கிடந்தது தெரிந்தது. தகவலறிந்து அங்கு வந்த குடும்பத்தினர் அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

புகாரின்பேரில், அரூர் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் வான்மதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், தடயவியல் துறையினரும் வந்து சோதனை மேற்கொண்டனர். பின்னர், தஸ்லீம்பானு மற்றும் குழந்தை ஆத்தீப்பின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், குழந்தையின் கை மணிக்கட்டை பிளேடால் அறுத்து கொன்றுவிட்டு, தஸ்லீம்பானு தனது இரண்டு கைகளையும் அறுத்துள்ளார். அதன்பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனஉளைச்சலில் இருந்த தஸ்லீம்பானு குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தர்மபுரி அருகே பரபரப்பு பிளேடால் 9 மாத குழந்தை கையை அறுத்துக்கொன்ற தாய் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: