மகனை வெட்டி கொன்ற அதிமுக பிரமுகர் கைது: திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

மன்னார்குடி: மன்னார்குடி அருகே சொத்து தகராறில் மகனை வெட்டி கொன்ற அதிமுக பிரமுகரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சேரி கிராம மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலு (எ) பாலகிருஷ்ணன்(56). கோட்டூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர். இவரது மனைவி பவானி(50). இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் அரவிந்த் மோகன்(32) திருமணமாகி மனைவி ஜெயபிரித்தாவுடன் வீட்டில் மாடியில் வசித்து வந்தார். 2வது மகன் அருண் மோகன்(30) மன்னார்குடியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பாலகிருஷ்ணன் தனது சொத்துக்களை 2 மகன்களுக்கும் பிரித்து கொடுக்க முடிவு செய்தார். இது தொடர்பாக தந்தைக்கும், அரவிந்துக்கும் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு வீட்டின் தரைதளத்தில் தந்தைக்கும், அரவிந்துக்கும் மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், மகன் அரவிந்தை அரிவாளால் சரமாரியாக 20 இடங்களில் வெட்டினார். இதை தடுக்க வந்த மனைவி பவானி மற்றும் மருமகள் ஜெயப்பிரித்தா ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அரவிந்த் மேல்சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து பாலகிருஷ்ணன், அருண் மோகனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை பாலகிருஷ்ணன் போலீசில் சரணடைந்தார். இதையடுத்து மன்னார்குடி கோர்ட்டில் பாலகிருஷ்ணனை ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அருண் மோகனை தேடி வருகின்றனர்.

The post மகனை வெட்டி கொன்ற அதிமுக பிரமுகர் கைது: திருச்சி மத்திய சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: