ஈரோடு, ஏப். 9: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஈரோடு வழியாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர். தமிழ் மாதம் பங்குனியில் வரும் உத்திர நட்சத்திர நாளில் தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்த நாள் என்பதால், அந்த நாளில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு பங்குனி உத்திர விழா வரும் 11ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி பவானி, சேலம் மாவட்டம் சங்ககிரி, வெப்படை, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போன்ற பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை முருகன் கோயிலுக்கு ஈரோடு வழியாக பாதயாத்திரையாக செல்ல துவங்கியுள்ளனர்.
இதில் நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் மயில் காவடி, சந்தனகாவடி உள்ளிட்ட காவடிகளை சுமந்து நாமக்கல்-ஈரோடு மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் நீராடி, பின்னர் அங்கிருந்து மாநகரின் முக்கிய வீதி வழியாக பழனிக்கு பாதயாத்திரை சென்றனர்.
The post பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஈரோடு வழியாக பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை appeared first on Dinakaran.