வேலூர், ஏப்.11: பகுதிநேர வேலை, முதலீடு ஆசைக்காட்டி அரசு பெண் ஊழியர், உதவி பேராசிரியர் ஆகியோரிடம் ரூ.23.54 லட்சம் துணிகர மோசடி நடந்தது தொடர்பாக வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண். இவர் நகராட்சி அலுவலகத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகுதி நேர வேலையில், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என மெசேஜ் வந்துள்ளது. பின்னர் அரசு பெண் ஊழியரை டெலிகிராம் குரூப்பில் இணைத்துள்ளனர். பின்னர், அரசு பெண் ஊழியர் ரூ.9 லட்சத்து 86 ஆயிரத்து 665 முதலீடு செய்துள்ளார். அதில் சிறிய தொகையை கமிஷனாக பெற்றுள்ளார். பின்னர் அந்த மொபைல் அப்ளிகஷேனில் பணத்தை எடுக்க முயன்ற போது, இன்னும் அதிக பணத்தை முதலீடு செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அரசு பெண் ஊழியர், விசாரித்தபோது, பகுதிநேர வேலை என்ற பெயரில் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
அதேபோல், கணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றிய வரும் உதவி பேராசிரியர், செல்போன் எண்ணிற்கு முதலீடு செய்தால், அதிக லாபம் எனக்கூறியதால் ரூ.13 லட்சத்து 68 ஆயிரத்து 591 முதலீடு செய்து, ஏமாற்றம் அடைந்துள்ளார். பகுதிநேர வேலை, முதலீடு ஆசைக்காட்டி அரசு பெண் ஊழியர், உதவி பேராசிரியர் ஆகியோரிடம் ரூ.23.54 லட்சம் மோசடி தொடர்பாக இருவரும் தனித்தனியாக, வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் பங்குச்சந்தை முதலீடு விளம்பரங்கள், பகுதி நேர வேலை போன்ற பல்வேறு விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
The post பகுதிநேர வேலை, முதலீடு ஆசைக்காட்டி அரசு பெண் ஊழியர், உதவி பேராசிரியரிடம் ரூ.23.54 லட்சம் துணிகர மோசடி: வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.