நூதன முறையில் பேசி துணிகரம் ஆன்லைனில் 7 பேரிடம் ரூ.7.99 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

 

புதுச்சேரி, ஏப். 10: ஆன்லைனில் 7 பேரிடம் ரூ.7.99 லட்சம் மோசடி செய்த ஆசாமிகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவரது முகநூலில் வெளிநாட்டில் வேலை இருப்பதாக விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். பின்னர் அதில் இருந்த நபரை வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொண்டு மர்ம நபரிடம் பேசியுள்ளார். அப்போது வேலைக்காக ஒர்க் விசா பதிவு செய்ய முன்பணம் அனுப்புமாறு மர்ம நபர் கூறியுள்ளார்.

இதனை நம்பி வைத்திலிங்கம் மர்ம நபருக்கு ரூ.3.82 லட்சத்தை அனுப்பியுள்ளார். பின்னர் மர்ம நபரிடம் இருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. தொடர்ந்து தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த தையல்நாயகி என்பவரை மர்ம நபர் டெலிகிராம் மூலம் தொடர்புகொண்டு வீட்டிலிருந்தபடி பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனை நம்பி தையல்நாயகி ரூ.1.83 லட்சத்தை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

இதேபோல் திண்டிவனம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரும் ரூ.1.80 லட்சத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். மேலும் லாஸ்பேட்டை சேர்ந்த நன்னன் என்பவரை மர்ம நபர் தொடர்புகொண்டு குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி நன்னன், லோனுக்கு விண்ணபித்தபோது, செயலாக்க கட்டணமாக ரூ.20,800 அனுப்பிய உடன், மர்ம நபர் நன்னனுடன் இருந்த இணைப்பை துண்டித்துவிட்டார். அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.

தொடர்ந்து உழவர்கரையை சேர்ந்த சுப்பிரதா ரூ.9 ஆயிரமும், கரிக்கலாம்பாக்கம் சேர்ந்த சந்திரகுமார் ரூ.2 ஆயிரமும், வில்லியனூரை சேர்ந்த நரேந்திர அகர்வால் ரூ.2,500ஐயும் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். மொத்தமாக 7 பேரிடம் இருந்தும் ரூ.7.99 லட்சத்தை மோசடி கும்பல் ஏமாற்றி உள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நூதன முறையில் பேசி துணிகரம் ஆன்லைனில் 7 பேரிடம் ரூ.7.99 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: