தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து ரவியை விடுவிக்க வேண்டும்: கடலூரில் பாலகிருஷ்ணன் பேட்டி

 

கடலூர், ஏப். 10: தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து ரவியை விடுவிக்க வேண்டுமென கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கடலூரில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் 2 நீதிபதிகளின் அமர்வு அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. முழுக்க முழுக்க ஆளுநர் செய்தது சட்டவிரோதம்.

அவருடைய அதிகாரத்தை தாண்டி அவர் செயல்பட்டு இருக்கிறார் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களை 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளார். ஒப்புதல் வழங்குவதற்கான காலக்கெடுவையும் தீர்மானித்து உள்ளனர் நீதிபதிகள். ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்பட்டு இருக்கிறார் என்பதற்கான தீர்ப்பு இது. இது சம்பந்தமாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தீர்ப்பு எதிர்காலத்தில் ஆளுநர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஆளுநரும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்க மறுத்த 10 மசோதாவிற்கும் உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கியுள்ளது. தீர்ப்பு கூறப்பட்ட தினத்தில் இருந்து சட்டமாக்கப்படும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. சிறப்பான தீர்ப்பை பெற்ற தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரலாற்று சிறப்புமிக்க சிறப்பாக உள்ளது.

உச்சநீதிமன்றம் ஆளுநர் சட்ட வரம்பை மீறி நடந்துள்ளார் என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக ரவியை விடுவிக்க வேண்டும். ஒன்றிய அரசு அவரை திரும்பபெற வேண்டும். இதுதான் உச்சநீதிமன்றத்திற்கு மரியாதை கொடுக்கிற விஷயமாக இருக்கும். இல்லையென்றால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்க கூடியதாக இருக்கும். ஒன்றிய அரசு வக்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நள்ளிரவு 2 மணிக்குமேல் நிறைவேற்றி உள்ளது.

இது வக்பு சட்டத்தை நசுக்கும் விதமாக உள்ளது. நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சட்ட திருத்தத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வருகிற 17ம்தேதி தமிழக முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற உள்ளன. ஒன்றிய அரசு சிலிண்டர் எரிவாயு விலையை உயர்த்தி உள்ளது. இது கண்டனத்துக்குரியது. பாம்பன் பாலத்தை திறக்க வந்த பிரதமர் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரியில் தமிழில் பயிற்றுவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். தமிழ் மீது அவ்வளவு அக்கறை கொண்டுள்ள பிரதமர் ஏன் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை. தமிழகத்திற்கு வரும்போது மட்டும் பிரதமர் தமிழைப்பற்றி பேசி நாடகம் ஆட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து ரவியை விடுவிக்க வேண்டும்: கடலூரில் பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: