திண்டிவனம், ஏப். 17: திண்டிவனம் அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் எதிரே சாலையில் நின்று வாகனங்களை மறித்து மது போதையில் வடமாநில வாலிபர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் சென்னை- புதுவை தேசிய நெடுஞ்சாலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தின் எதிரே நேற்று முன்தினம் மாலை வட மாநில இளைஞர் ஒருவர் குடிபோதையில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று அந்த வழியாக வரும் வாகனங்களை மறித்தும் கல்லால் சிலரை தாக்கியும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே அந்த வட மாநில இளைஞர் திடீரென தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்குள் நுழைய முயன்றார். உடனே அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த பாதுகாவலர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். பின்னர் இதுகுறித்து கிளியனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த போலா(38) என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் எதுக்கு இங்கு வந்தார் என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா? இல்லை இந்த பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளை அடிக்க வந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதில் வடமாநில வாலிபருக்கு தலையில் காயம் ஏற்பட்டு கட்டு கட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் அருகே மது போதையில் வடமாநில வாலிபர் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் முன்பு போதையில் வாகனங்களை மறித்து வடமாநில இளைஞர் ரகளை appeared first on Dinakaran.