கள்ளக்குறிச்சி, ஏப். 9: உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து நடத்துனர், டிக்கெட் பரிசோதகர் மோதல் சம்பந்தமான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பெரியகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுபசந்திரபோஷ். கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனை கிளை 2ல் நடத்துநராக பணியாற்றி வருகிறார். கடந்த 30ம் தேதி கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் பேருந்தில் பணியில் இருந்தார்.
பேருந்து உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கியபோது அங்கு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டல டிக்கெட் பரிசோதகர் சண்முகம்(58) பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது கெடிலம் பேருந்து நிலையத்தில் ஒருவர் பரிக்கல் கிராமத்தில் பேருந்து நிறுத்தப்படுமா? என கேட்டதாகவும், அங்கு நிறுத்தம் இல்லை என கூறி அந்த நடத்துநர் ஏற்றவில்லை எனவும் தெரிகிறது. அப்போது பேருந்தில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் சண்முகம் திடீரென நடத்துனர் சுபசந்திரபோஷ் சட்டையை பிடித்து இழுத்ததால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது நடத்துநர் டிக்கெட் பரிசோதகரிடம் பரிசோதகர் வேலையை மட்டும் பார், எப்படி எனது சட்டையை பிடித்து இழுக்கலாம் என கூறி கடும் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் உன்னை சும்மா விடமாட்டேன், கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன் என நடத்துநர் கூறி உள்ளார். பின்னர் டிக்கெட் பரிசோதகர் என்னை எப்படி கீழே தள்ளலாம் என கேட்டபோது எனது சட்டையை எப்படி பிடித்து இழுக்கலாம், அதனால் தான் உன்னை கீழே தள்ளினேன் என நடத்துனர் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு அரசு பஸ் நடத்துனர், டிக்கெட் பரிசோதகர் மோதல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.