இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கனகராஜின் மனைவி, மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உள்பட 245 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வழக்கில் கைதானவர்கள் மற்றும் எதிர்தரப்பினர் தங்களுக்கு ஒரு சிலர் மீது சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, 18 பேரிடம் விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அமர்வு உத்தரவிட்டது. அதன்பேரில் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் முன்னாள் பங்குதாரராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் இருந்ததால் பங்களாவில் பணம், விலை உயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்த தகவல்களை கேட்டறிய 27ம் தேதி (நேற்று) கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி சுதாகரன் நேற்று காலை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் ஏடிஎஸ்பி முருகவேல் 2 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினார். அப்போது அவர் அளித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். விசாரணை முடிந்த பின் வெளியே வந்த சுதாகரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், தன்னிடம் 40 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு தான் சரியாக பதில் அளித்ததாகவும் கூறிவிட்டு சென்றார்.
* எடப்பாடி, இளவரசியை விசாரிக்க விரைவில் சம்மன்
கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, இளவரசியிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறியதாவது: இந்த வழக்கில் 18 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவின்படி அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சசிகலாவிடம் சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி விட்டனர். மற்றவர்களுக்கு சம்மன் அனுப்பட்டு வருகிறது. சுதாகரன் நேற்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இளவரசியிடம் விசாரணைக்கு சம்மன் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும். அதேபோல சேலம் விபத்தில் உயிரிழந்த கனகராஜூக்கு, கொடநாடு போலீஸ்காரர் கனகராஜ் செல்போனில் மெசேஜ் அனுப்பியதாகவும், அதன்பின்னரே கனகராஜ் உயிரிழந்ததாகவும் விசாரணையில் சிலர் தெரிவித்துள்ளனர். அதன் உண்மை தன்மை போலீஸ்காரர் கனகராஜின் செல்போன் கிடைத்தால்தான் தெரியவரும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை: சிபிசிஐடி கேட்ட 40 கேள்விகளுக்கு வாக்குமூலம் appeared first on Dinakaran.