பெரியார்நகர் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு: நோயாளிகளிடம் நலம் விசாரிப்பு

பெரம்பூர்: சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில்பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். மருத்துவமனை ஆய்வகங்கள், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வார்டுகளுக்கும் சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா உள்பட பலர் இருந்தனர். இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது; கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள பெரியார் மருத்துவமனை முதலமைச்சர் திறந்துவைத்த மறு தினமே மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பொதுப்பணித்துறை சார்பாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழைய கட்டிடத்தில் 300 படுக்கைகள் உள்ளது. மொத்தமாக 870 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. புதிய மருத்துவமனையில் 25க்கு மேற்பட்ட மருத்துவ துறைகள் செயல்பட்டு வருகிறது. நியூராலஜி, ஆர்த்தோ, கார்டியாலஜி சிறப்பு துறைகளில் சோதனைகளும் பரிசோதனைகளும் நடைபெற்று வருகிறது. ஒரு நாளில் 125க்கும் மேற்பட்ட நோயாளிகள் மார்பக பிரச்னைகளுக்காக வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் 639 பேர் பணியாற்றி வருகின்றனர். சிறப்பு அம்சமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரே ஆபரேஷன் தியேட்டரில் கிட்னி எடுப்பது, கிட்னி பொருத்துவது என இரண்டுக்கும் ஒரே ஆபரேஷன் தியேட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவமனை கார்ப்பரேட் அலுவலகத்தை மிஞ்சும் அளவுக்கு சுத்தமாக உள்ளது. நேரடியாக வார்டுக்கு சென்று நோயாளிகளிடம் கேட்டபோது முகம் பூரித்து சிறப்பாக பார்த்துக்கொள்கிறார்கள் எனவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்று என்னிடம் சொல்லி உள்ளார்கள். இதனால் முதலமைச்சரை சந்தித்து தொகுதி மக்கள் உங்களுக்கு நன்றி சொன்னார்கள் என தெரிவிக்க உள்ளேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

The post பெரியார்நகர் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு: நோயாளிகளிடம் நலம் விசாரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: