4 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற இளம்பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்கொல்லை காமன் கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன் (42). இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் அஸ்வத் (4). இந்த சிறுவன் கடந்த 26.1.2022 அன்று திடீரென காணாமல் போனான். இதுகுறித்து செந்தில்நாதன் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்தபோது வீட்டின் அருகே உள்ள முந்திரி தோப்பில் பிணமாக கண்டெடுக்கப்பட்டான்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கீழக்கொல்லை பகுதியை சேர்ந்த முருகவேல் மகள் ரஞ்சிதா (26) என்பவர் அஸ்வத்தை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் செந்தில்நாதன் வீட்டுக்கும், முருகவேல் வீட்டுக்கும் இடபிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்ததால் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து ரஞ்சிதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி ஷோபனா தேவி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் ரஞ்சிதா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சிதாவை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post 4 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற இளம்பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: