தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் வியாபாரியை கொன்ற மனைவி காதலனுக்கு ஆயுள் தண்டனை

*ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த உன்னிசெட்டி கிராமத்தை சேர்ந்தவர் காய்கறி வியாபாரி ஐயப்பன். இவரது மனைவி ரூபா (27). ஐயப்பன் அப்பகுதியில் மினி சரக்கு வாகனத்தில் காய்கறிகளை ஏற்றி சென்று விற்பனை செய்து வந்தார்.

மஞ்சுகிரியை சேர்ந்த தங்கமணி (25) என்பவர், ஐயப்பனுக்கு உதவியாக இருந்தார். இந்நிலையில் தங்கமணிக்கும், ரூபாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. இதனை அறிந்த ஐயப்பன், அவர்களை பல முறை கண்டித்துள்ளார்.

தங்களது தகாதஉறவுக்கு இடையூறாக உள்ள ஐயப்பனை தீர்த்துக் கட்ட ரூபா முடிவு செய்தார். அதன்படி, கடந்த 21.10.2021 அன்று மதுபோதையில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த ஐயப்பனை, ரூபாவும், தங்கமணியும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

பின்னர், கணவன் மதுபோதையில் தன்னை தானே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, ரூபாவையும், தங்கமணியையும் கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை, ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், ரூபா மற்றும் தங்கமணி ஆகிய இருவருக்கும், ஆயுள் தண்டனை மற்றும் தலா ₹1000 அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் தீர்ப்பளித்தார்.

The post தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் வியாபாரியை கொன்ற மனைவி காதலனுக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: