இந்த இரட்டைக் கொலைக்கு பழிக்குப்பழியாக 2009ல் ஐயப்பன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் கிளாக்குளத்தில் இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் நிலவி வந்தது. இந்நிலையில் 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதே பகுதியில் உள்ள சந்தானமாரியம்மன் கோயில் கொடைவிழாவில் மீண்டும் இரண்டு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, சுப்பையாதாஸ் என்பவரின் தந்தை சந்தனத்தை கொலை செய்ய உடந்தையாக செயல்பட்டதாகக் கூறி, வீரவநல்லூர் நகர திமுக செயலாளரான ரத்தினம் என்ற ரத்தினவேல்பாண்டினை அவர்கள் கோயிலில் இருந்து விரட்டி உள்ளனர்.
இச்சம்பவத்திற்குப் பிறகு ரத்தினம் என்ற ரத்தினவேல்பாண்டியனை பழிக்குப்பழியாக கொலை செய்ய சுப்பையா தாஸ் திட்டமிட்டு, 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி இரவு பயங்கர ஆயுதங்களுடன் ரத்தினவேல் பாண்டியனை சுற்றி வளைத்து ஓட ஓட விரட்டி படுகொலை செய்து விட்டு தப்பினர். இந்த கொலை வழக்கில் 21 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், வீரவநல்லூரைச் சேர்ந்த குமார் என்ற சுடலைமுத்து, அண்ணாமலை, சிவபெருமாள் என்ற சிவா, கூனியூர் நயினார் என்ற ஆறுமுக நயினார் ஆகிய 4 பேர் விசாரணை காலத்தில் உயிரிழந்தனர்.
வீரவநல்லூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்கிற வக்கீல் மணி என்ற மண்டைமணி (45) என்பவர் மீதான வழக்கு தனிவழக்காக மாற்றப்பட்டது. இதனால் குற்றம்சாட்டப்பட்ட 16 பேர் மீதான கொலை வழக்கு நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் சுப்பையாதாஸ், வீரவநல்லூர், யாதவர் வடக்கு தெருவைச் சேர்ந்த பொன்னையாதாஸ் மகன் சுரேஷ் (37), 3வது தெற்குத்தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் சுரேஷ் (37), 1வது வடக்குத் தெருவைச் சேர்ந்த கொம்பன் மகன் கொம்பையா (38) ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். எஞ்சிய 12 பேரை விடுவித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கருணாநிதி ஆஜரானார். இந்த வழக்கில் ஆவணங்களை சமர்பித்து துரிதமாக செயல்பட்ட வீரவநல்லூர் போலீசாரை எஸ்பி சிலம்பரசன் பாராட்டினார்.
The post நெல்லை திமுக நிர்வாகியை கொன்ற 4 பேருக்கு ஆயுள்: 12 பேர் விடுதலை appeared first on Dinakaran.