இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இது குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேற்று முன்தினம் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த குற்றவாளிகளை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். குற்றவாளிகளின் அடையாளமாவது தெரிந்ததா என்று கேள்விகளால் தாம்பரம் அதிகாரிகளை துளைத்தெடுத்தார். இந்தக் கூட்டத்தில் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கொள்ளை வித்தியாசமாக நடந்ததால், இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண், தனியாக தனது தனிப்படையுடன் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை ஆலோசனை நடத்தினார். அப்போது உள்ளூர் செயின் பறிப்பு குற்றவாளிகள், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டால், ஒன்று அல்லது 2 செயின் பறிப்பு சம்பவங்களில் மட்டுமே ஈடுபடுவார்கள். தொடர்ந்து குற்றம் செய்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் உண்டு. ஆனால், வெளிமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் தான் இந்த தொடர் குற்றத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்தார் கமிஷனர் அருண்.
இதனால் வெளிமாநில அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, இதுபோன்ற தொடர் செயின் பறிப்பு கொள்ளையர்கள் குறித்து விவரங்களை விசாரித்தார். அதில், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநில கொள்ளையர்கள் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்று தெரியவந்தது. இந்த கொள்ளையர்கள் விமானம் மற்றும் ரயிலில் வந்து கொள்ளையில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று காலை 6 மணிக்கு செயின் பறிப்பு சம்பவம் தொடங்கியது. சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் இந்திரா (54). இவர் சைதாப்பேட்டை பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார்.
இவர் கடைக்கு தேவையான பொருட்களுடன் நந்தனம் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலகம் எதிரே நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் இந்திராவை வழிமறித்து முகவரி கேட்பது போல் அவர் கழுத்தில் அணிந்து இருந்த ஒன்றரை சவரன் செயினை பறித்து கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து இந்திரா காலை 6.10 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சென்னை போலீஸ் கமிஷனர் அருண், அனைத்து காவல் நிலையங்களுக்கும் மைக்கில் தொடர்ந்து அலர்ட் கொடுத்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே 6.30 மணிக்கு அடுத்த சம்பவம் நடந்தது.
சாஸ்திரி நகர் காமாட்சி மருத்துவமனை 1வது அவென்யூ அருகே நேற்று காலை 6.30 மணிக்கு அடையார் பரமேஸ்வரி நகர் 3வது தெருவை சேர்ந்த அம்புஜம்மாள் (66) என்பவர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் 3 கிராம் செயினை பறித்து சென்றனர். அடுத்ததாக 6.45 மணிக்கு திருவான்மியூர் இந்திரா நகர் 29வது குறுக்கு தெருவில் திருவான்மியூர் பெரியார் நகர் டிஎன்சிஎஸ்பி குடியிருப்பு பகுதியை சேர்ந்த லட்சுமி (54) நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அவரிடமும் பைக் ஆசாமிகள் 2 பேர் 8 சவரன் செயினை பறித்து சென்றனர்.
இந்த சம்பவம் நடந்த 15 நிமிடத்தில், காலை 7 மணிக்கு கிண்டி எம்ஆர்சி நகர் புத்துகோயில் அருகே கிண்டி பாரதி நகர் பாரதி செயின்ட் பகுதியில் நடைபயிற்சி சென்ற நிர்மலா (60) என்பவரிடம் 10 சவரன், வேளச்சேரி டான்சி நகர் 12வது தெருவில் நேற்று காலை 7.10 மணிக்கு மேடவாக்கம் சந்தோஷ்புரம் விஜயநகரம் பகுதியை சேர்ந்த விஜயா (72) என்பவரிடம் 2 சவரன் ,அடுத்த சில நிமிடங்களில் வேளச்சேரி விரிவாக்கம் வடக்கு விஜயா நகர் பகுதியில் வேள்சேரி மேட்டு தெருவை சேர்ந்த முருகாம்மாள் (55) என்பவரிடம் 3 சவரன் செயினை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.
அடையார் காவல் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் 7.10 மணிக்குள் அடுத்தடுத்து 6 பெண்களிடம் மொத்தம் 25 சவரன் மதிப்புள்ள தங்க செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இது குறித்து அடுத்தடுத்து புகார்கள் வந்தவுடன், சென்னையில் கொள்ளையில் ஈடுபட்டது கண்டிப்பாக வடமாநில கொள்ளையர்கள்தான் என்ற முடிவுக்கு கமிஷனர் அருண் வந்தார். இதனால், சென்னை முழுவதும் போலீசார் வேட்டையை தொடங்கினர். நகர் முழுவதும் போலீசார் துப்பாக்கியுடன் வாகனச் சோதனை நடத்தினர். வாகன சோதனை அதிகமானதும் கொள்ளையர்கள் காலை 7 மணிக்கு செயின் பறிப்பை நிறுத்திக் கொண்டனர்.
வாகனச் சோதனைக்குப் பயந்து பைக்கில் எங்காவது பைக்கை போட்டு விட்டு, மின்சார ரயிலில் சென்ட்ரல் வந்து, அங்கிருந்து வடமாநிலம் தப்பிச் செல்லலாம் என்பதால் மின்சார ரயில்கள் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை தீவிரமானது. சந்தேக நபர்களை பிடித்து விசாரித்தனர். அதேநேரத்தில், சென்னை விமான நிலையத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் சிபி சக்கவர்த்தி, அடையாறு, மவுண்ட் துணை கமிஷனர்களையும் களத்தல் இறக்கிவிட்டார் அருண். இவர்கள், அனைவருமே காலையில் 7 மணிக்கெல்லாம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
மற்றொரு குழுவினர் கொள்ளை நடந்த இடங்களில் சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கொள்ளையர்களின் அடையாளம் தெரிந்தது. பைக் ஓட்டுபவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். பின்னால் அமர்ந்திருப்பவர் முகமூடி அணிந்திருந்தார். இதனால் பைக் நம்பரை வைத்தும் தேடினர். மேலும் கொள்ளையர்கள் கண்டிப்பாக உடைகளை மாற்றியிருப்பார்கள். ஆனால் தாங்கள் அணிந்திருந்த ஷூவை மட்டும் மாற்றியிருக்க மாட்டார்கள். இதனால் உடைகள் அல்லது ஷூ வைத்து கொள்ளையர்களை தேடத் தொடங்கினர். மேலும், விமானநிலையத்தில், கடைசி நேரத்தில் டிக்கெட் எடுப்பவர்கள் குறித்தும் விசாரித்தனர்.
அதில் ஒருவர் அப்போது தான் இண்டிகோ ஏர்லைன்சில் மும்பை செல்ல டிக்கெட் எடுத்துக் கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தில் பிடித்தபோது போலீசிடம் இருந்து தப்ப முயன்றார். அவரைப் பிடித்து விசாரித்த போது ஒரு குற்றவாளி ஐதராபாத் செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்திருப்பதாக தெரிவித்தார். அவரையும் சினிமா பாணியில் விமானத்துக்குள் புகுந்து போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் வர மறுத்தார். கடைசியில் சிஐஎஸ்எப் போலீசார் உதவியுடன் அவரை பிடித்து, சிங்கம் படத்தில் வருவதுபோல குற்றவாளியை கைது செய்து வெளியே அழைத்து வந்தனர். இவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இராணி பகுதி கொள்ளையர்கள் என்று தெரிந்தது.
இவர்கள் தான் காலையில் 6 செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. அவர்களை தனி இடத்தில் வைத்து இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி விசாரணை நடத்தி வருகிறார். கடந்த மாதம் தாம்பரத்தில் நடந்த கொள்ளையிலும் இவர்கள் தான் ஈடுபட்டார்களா என்று போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கொள்ளையில் மேலும் ஒருவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், வடமாநிலத்துக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த மற்றொரு கொள்ளையன் சல்மான் உசேனை ஓங்கோல் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* தனிப்படையினருக்கு முதல்வர் பாராட்டு
சென்னையில் கொள்ளையில் ஈடுபடுவதற்காக சுராஜ், ஜாபர் ஆகிய 2 பேரும் விமானத்தில் சென்னை வந்தனர். இரு நாட்களுக்கு முன்னதாக ஒருவர் சென்னை வந்துள்ளார். அவர்தான் சென்னையில் பைக் ஏற்பாடு செய்துள்ளார். விமானத்தில் வந்த கொள்ளையர்கள், நேற்று காலையில் கொள்ளையில் ஈடுபட்டு மீண்டும் தனித்தனியாக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். தற்போது போலீசில் மாட்டிக் கொண்டனர். பிடிபட்டவர்களிடம் இருந்து நகைகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் தாம்பரம் கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டார்களா என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை கைது செய்த போலீஸ் கமிஷனர் அருண் தலைமையிலான தனிப்படை போலீசாரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
* முதல்முறையாக விமானத்தில் கைது செய்த சம்பவம்
சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு விமான மூலம் டெல்லி செல்ல இருந்த மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மீசாமும் துஷ்வாசம் மேசம் இரானி (28), மும்பை செல்ல இருந்த ஜாபர் குளாம் உசேன் இரானி (26) ஆகியோரைப் போலீஸ் கமிஷனர் அருண் எடுத்த அதிரடி நடவடிக்கையால் 4 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்த தங்க நகைகள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. செயின் பறிப்பு குற்றவாளிகளை விமான நிலையத்திற்குள் புகுந்து புறப்பட தயாராக இருந்த விமானத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் இதுவே முதல் முறை. குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை கமிஷனர் அருண் பாராட்டினார்.
The post சென்னையில் 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 இடங்களில் செயின் பறிப்பு பிரபல வடமாநில கொள்ளையர்களை விமானத்தில் மடக்கிப் பிடித்த போலீசார்: சினிமா காட்சிகளை போல் 3 மணி நேரத்தில் தட்டித் தூக்கிய தனிப்படை appeared first on Dinakaran.