மதுரை அருகே இன்று அதிகாலை பரபரப்பு; போலீஸ்காரரை கொன்று எரித்த வழக்கில் குற்றவாளி சுட்டுப்பிடிப்பு: விசாரணையின்போது தப்பிக்க முயன்றதால் போலீஸ் அதிரடி

மதுரை: மதுரை அருகே, தனிப்படை போலீஸ்காரரை கொன்று எரித்த வழக்கில் கைதான குற்றவாளியை இன்று அதிகாலை, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, திடீரென போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். சுதாரித்த போலீசார் குற்றவாளியை காலில் சுட்டுப்பிடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள கொக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன் (36). இவர், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தனிப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாண்டிச்செல்வி (33). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2 வாரத்துக்கு முன்பு உறவினரின் சுபநிகழ்வுக்கு கணவன், மனைவி இருவரும் டூவீலரில் சென்று திரும்பும்போது வாகனம் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பாண்டிச்செல்வி உயிரிழந்தார்.

இதையடுத்து மனைவி இறந்த சோகத்தில் விடுமுறையில் இருந்த மலையரசன், கடந்த 18ம் தேதி டூவீலரில் மதுரைக்கு வந்தார். அங்கு திடீரென மாயமானார். அன்று மாலை மதுரை விமான நிலையம் அருகே உள்ள ஈச்சனேரி கண்மாயில் எரிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கிடந்தது. பெருங்குடி போலீசார் உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு 20ம் ேததி மலையரசனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை தத்தனேரி மின்மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடந்தது. மலையரசன் தனிப்படை போலீஸ்காரராக இருந்ததால் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் சிவகங்கை மாவட்ட தனிப்படை போலீசார், பெருங்குடி போலீசார் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சந்தேகத்தின் பேரில், மலையரசனிடம் இருந்த அவரது மனைவியின் செல்போனை வைத்திருந்தவர், சம்பவம் நடந்த பகுதியில் வாகனங்களில் வருவோரிடம் யாசகம் எடுக்கும் 2 திருநங்கைகள் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், இதில் துப்பு ஏதும் கிடைக்காத நிலையில் அவர்களை விடுவித்தனர். இதனிடையே, மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மூவேந்திரன் என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்து இரவில் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இன்று அதிகாலையில் திருமங்கலம் இன்ஸ்பெக்டர் சரவணன், பெருங்குடி எஸ்ஐ மாரிக்கண்ணன் தலைமையிலான போலீசார் மூவேந்திரனை ஈச்சனேரி பகுதி கண்மாயில் மலையரசனின் உடல் மீட்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, மூவேந்திரன் திடீரென எஸ்ஐ மாரிக்கண்ணனை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து திருமங்கலம் இன்ஸ்பெக்டர் சரவணன் துப்பாக்கியால் மூவேந்திரனின் காலில் சுட்டுப்பிடித்தார். இதில், காயமடைந்த அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மூவேந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திடுக்கிடும் தகவல்
முன்னதாக, மூவேந்திரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் வருமாறு: மூவேந்திரனும், மலையரசனும் நண்பர்கள். மலையரசன் மதுரைக்கு வரும்போது மூவேந்திரனுடன் ஆட்டோவில் சென்று மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவத்தன்று அவனியாபுரம் ரிங்ரோடு பகுதியில் சாலையோரம் அமர்ந்து இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது மூவேந்திரன் மலையரசனிடம் இருந்து பணம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மூவேந்திரன் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து மலையரசனின் பின்தலையில் பலமாக தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மூவேந்திரன் ஆட்டோவில் இருந்த பெட்ரோலை எடுத்து மலையரசனின் உடலை எரித்து ஈச்சனேரி பகுதி கண்மாய் பகுதியில் வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

The post மதுரை அருகே இன்று அதிகாலை பரபரப்பு; போலீஸ்காரரை கொன்று எரித்த வழக்கில் குற்றவாளி சுட்டுப்பிடிப்பு: விசாரணையின்போது தப்பிக்க முயன்றதால் போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: