பின்னர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவருடைய இல்லத்தில், நானும் கட்சி முன்னணித் தலைவர்களும் சந்தித்து பேசி கோரிக்கை மனு அளித்தோம். அந்தக் கோரிக்கை மனுவில் என்ன இருந்தது என்பது குறித்து டெல்லி விமான நிலையத்தில் நான் விளக்கமாக கூறிவிட்டேன். கூட்டணி குறித்து எந்த கட்சியாவது ஒரு நிலையான முடிவில் இருக்கிறார்களா? அதுகுறித்து சொல்ல முடியாது. தேர்தல் கூட்டணி என்பது அரசியல். அரசியல் கூட்டணிகள் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் இருக்கும். அதை இப்போது எப்படி உறுதியாக சொல்ல முடியும்? ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும், 2019 தேர்தலின் போதும், எந்த நேரத்தில் நாங்கள் கூட்டணி பற்றிய அறிவிப்பு கொடுத்தோம்? தேர்தலுக்கு முன்னால் பிப்ரவரி மாதம் தான், கூட்டணி குறித்து அறிவித்தோம். 2021 சட்டமன்றத் தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்பு நெருக்கத்தில் அறிவித்தோம்.
அதைப்போல தேர்தல் வரும் போதுதான், கூட்டணி குறித்து, ஒத்த கருத்துகள் உடைய கட்சிகளோடு கலந்து பேசி முடிவு செய்யப்படும். இப்பவே கூட்டணி இருக்கிறதா? இல்லையா? என்று கேட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும்? தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது அமித்ஷாவின் கருத்து, அதை அவர் பதிவிட்டுள்ளார். கூட்டணிகளுக்கு பல கட்சிகள் இருக்கும்போது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும். அதைப்போல் இது அவருடைய கட்சியின் விருப்பம். அதிமுகவை பொருத்தமட்டில் தேர்தல் கூட்டணி அமைக்கும் போது, அனைத்து செய்தியாளர்கள், ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை அழைத்து தெரிவிப்போம். எனவே, நீங்கள் அதுகுறித்து இப்போது கவலைப்பட வேண்டாம் என்றார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார் எடப்பாடி.
The post இப்போது எப்படி உறுதியாக சொல்ல முடியும்? அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் கூட்டணி அமையும்: டெல்லி சென்று திரும்பிய எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.