ஓபிஎஸ் தம்பி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

மதுரை: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பூசாரியாக இருந்தவர் நாகமுத்து. கடந்த 2012ல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கும், பூசாரி நாகமுத்துவுக்கும் கருத்து வேறுபாடு நிலவியது. அதில், நாகமுத்து தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதே ஆண்டில் திடீரென நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார்.அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஓ.ராஜா, பாண்டி, மணிமாறன் உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் பாண்டி இறந்துவிட்டார்.

பின்னர் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. ஓ.ராஜா மீதான வழக்கில் 390 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை முடிவில், ஓ.ராஜா உள்ளிட்ட அனைவரையும் பூசாரி தற்கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து திண்டுக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ஓ.ராஜா தரப்பினர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

The post ஓபிஎஸ் தம்பி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: