பாக்கு தோட்டத்தின் கேட்டை உடைத்த பாகுபலி யானை: கோவை அருகே பரபரப்பு


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே தனியார் பாக்கு தோட்டத்தின் காம்பவுண்ட் கேட்டை பாகுபலி யானை உடைத்து அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம், ஓடந்துறை, ஊமப்பாளையம், வச்சினம்பாளையம், பாலப்பட்டி, சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி என்று மக்களால் பெயரிட்டு அழைக்கப்பட்டு வரும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த யானை பகல் வேளைகளில் வனப்பகுதிக்குள்ளும், இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள்ளும் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது.

இந்த காட்டு யானை பாகுபலியை பிடித்து அடர் வனப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும், விவசாய சங்கங்களும் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்றிரவு மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் உள்ள கவின் கார்டன் அருகே உள்ள திருமலைராஜா (45) என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பாக்கு தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது, தோட்டத்தின் முன் பகுதியில் இருந்த காம்பவுண்ட் கேட்டை உடைத்தது. பின்னர், அங்கிருந்த சில பாக்கு மரங்களை சேதம் செய்துவிட்டு அருகில் இருந்த மற்றொரு தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது.

தொடர்ந்து பாகுபலி யானையின் அட்டகாசத்தால், விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பொருட்கள் சேதமாகி வருகிறது. இதனால், விவசாயிகள் நஷ்டம் அடைவதால், கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

The post பாக்கு தோட்டத்தின் கேட்டை உடைத்த பாகுபலி யானை: கோவை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: