சேந்தமங்கலம், மார்ச் 24: எருமப்பட்டி வட்டார பகுதியான நவலடிபட்டி, அம்பாயிபாளையம், பவித்திரம், பவித்திரம்புதூர், வரகூர் பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, சின்ன வெங்காயம் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிலோ ₹40 விற்பனை செய்யப்பட்டு வருவதால் அறுவடை செய்யப்பட்ட சின்னவெங்காயத்தை தோட்டத்தில் பட்டறை அமைத்து அதில் சேமித்து வைக்க தொடங்கியுள்ளனர். கொல்லிமலை அடிவார பகுதி என்பதால், இங்கு விளையும் சின்ன வெங்காயம் சுவை அதிகமாகவும், பெரிதாகவும் இருப்பதால் இதனை வாங்க பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வருகின்றனர். மேலும் இங்கு வாங்கப்படும், வெங்காயங்கள் வெளிமாநிலங்களுக்கும், ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘எருமப்பட்டி வட்டார பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி பிரதான விவசாய தொழிலாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்காய நடவு செய்யப்பட்ட போது நல்ல மழை பெய்ததால், வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்துள்ளது. மற்ற பகுதிகளில் இருந்தும் வெங்காயம் விளைச்சல் அதிகரித்து, அதிக அளவில் சந்தைகளுக்கு விற்பனைக்கு வருவதால், நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. இதனால், எருமப்பட்டி வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பட்டறை அமைத்து, சின்ன வெங்காயத்தை சேமித்து வைத்து விலை ஏற்றத்தின் போது விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்,’ என்றனர்.
The post சின்ன வெங்காயம் விலை தொடர் சரிவு appeared first on Dinakaran.