சுட்டெரிக்கும் வெயிலால் பழங்கள் விற்பனை ஜோர்

 

ராசிபுரம், மார்ச் 24: ராசிபுரத்தில், சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் தவிப்பில் இருந்து வரும் நிலையில், பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில், வழக்கமாக ஏப்ரல், மே, மாதங்களில் வெயில் சுட்டெரிப்பது வழக்கம். குறிப்பாக மே மாத அக்னி நட்சத்திர காலத்தில் தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். இந்நிலையில் ராசிபுரம், பட்டணம், ஆண்டகளூர் கேட், வெண்ணந்தூர், அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, சவுதாபுரம், அத்தனூர், ஆர்.புதுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் போல், வெயில் சுட்டெரித்தது. தாங்க முடியாத வெயில் காரணமாக பொதுமக்கள் தவிப்பில் இருந்து வருகின்றனர். நேற்று வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது.

சாலைகளில் அனல் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சாலைகளில் கோடை காலத்தை போல கானல் நீர் தோன்றியது. கடும் வெயிலால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் முகம் மற்றும் தலையை துணியால் மூடியபடி சாலைகளில் சென்று வருகின்றனர். வெயிலால் நேற்று பழங்கள், குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்தது. எலுமிச்சை, தர்பூசணி, வெள்ளரி காய். கம்மங்கூழ், கரும்புசாறு மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றின் விற்பனை
அதிகரித்தது.

The post சுட்டெரிக்கும் வெயிலால் பழங்கள் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Related Stories: