* 22 ஆண்டு பகை
* சிறையில் இருந்து ‘ஸ்கெட்ச்’
திருமங்கலம்: மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவரின் சகோதரி மகன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மதுரை, வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (எ) கிளாமர் காளி (35). இவர் மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டலத்தலைவர் வீ.கே.குருசாமியின் சகோதரி மகன். காளீஸ்வரனுக்கு இரு மனைவிகள். 2வது மனைவி மீனாட்சி. மதுரை மாவட்டம் திருநகரை அடுத்த வெங்கலமூர்த்தி நகரிலுள்ள மீனாட்சியின் வீட்டில் கடந்த சில தினங்களாக காளீஸ்வரன் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் இவர் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.
அப்போது இரு டூவிலர்களில் வந்த மர்மநபர்கள் அவரை வழிமறித்து, சரமாரியாக தாக்கி வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பிக்க அவர் ஓடிய போதும், பின்னால் துரத்தி வந்து காளீஸ்வரனை கும்பல் வெட்டியது. இதில் கழுத்து, தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்டு சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.காளீஸ்வரன் மீது ஏற்கனவே அவனியாபுரம், தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், விசாரணைக்காக நீதிமன்றத்திலும் அவர் ஆஜராகி வந்துள்ளார்.
தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சென்று காளீஸ்வரன் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது, உறவினர்கள், ஆதரவாளர்கள் ஆம்புலன்சை மறித்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுரை எஸ்பி அரவிந்தன், திருமங்கலம் ஏஎஸ்பி அனுசுல்நாகர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
கொலையாளிகளை பிடிக்க எஸ்பி உத்தரவின்படி இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வீ.கே.குருசாமியின் எதிர்தரப்பான மற்றொரு மண்டலத் தலைவர் ராஜபாண்டி சில வருடங்களுக்கு முன் உடல்நலமின்றி இறந்தார். அவரது உறவினரான வெள்ளைக்காளிக்கும், வீ.கே.குருசாமி தரப்புக்கும் தொடர்ந்து பகை நீடித்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் தற்போது சிறையில் இருக்கும் வெள்ளைக்காளி, அங்கிருந்தபடியே திட்டம் தீட்டி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று பிற்பகல் காளிஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனை முடித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வீ.கே.குருசாமி மற்றும் வெள்ளைக்காளி தரப்பில் 22 ஆண்டுகளாக பகை இருந்துவரும் நிலையில் தற்போது வீ.கே.குருசாமியின் சகோதரி மகன் கொலை செய்யப்பட்டதால் மீண்டும் மதுரையில் இருதரப்பு மோதல் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வீ.கே.குருசாமியின் வீடு மற்றும் வெள்ளைக்காளியின் ஆதரவாளர்கள் வீடுகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
* தொடரும் பழிக்குப்பழி கொலைகள்
மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் வீ.கே.குருசாமி, ராஜபாண்டி. உறவினர்களான இருவருக்குள் 2003ம் ஆண்டு முதல் பகை இருந்து வருகிறது. போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட சிறு தகராறு, கொலையில் முடிய, அதைத்தொடர்ந்து பழிக்குப்பழியாக அடுத்தடுத்து கொலைகள் அரங்கேறியதில் இதுவரை இருதரப்பிலும் 15க்கும் அதிக கொலைகள் நடந்துள்ளன. பெண்களை விட்டு விட்டு, இருதரப்பும் குடும்ப உறவுகளில் ஆண்களையே குறிவைத்து இந்த கொலைகள் நடத்தப்பட்டு வருகிறது. சிறைக்குள் இருந்தவரை பாதுகாப்புடன் இருக்கும் இருதரப்பினரும் வெளியில் வந்ததும் கொலைக்கு ஆளாவது தொடர்கதையாகிறது.
சிறையிலிருந்து வந்த வீ.கே.குருசாமியை 2 ஆண்டுக்கு முன்பு பெங்களூருக்கு தேடிச் சென்று கொடூரமாக வெட்டியபோதும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார். பின்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால், இவரது உறவினர் வெள்ளைக்காளி பழிக்குப்பழி நடவடிக்கையை தொடர்கிறார். இப்போதும் இருதரப்பு ஆண்களும் உயிர் பயத்திலேயே எப்போதும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில், ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளுவதில் முந்திக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
The post மதுரை மாநகராட்சி மாஜி மண்டல தலைவரின் சகோதரி மகன் படுகொலை appeared first on Dinakaran.