காரைக்கால்: ரூ.7 கோடி சாலை ஒப்பந்த பணிக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுத்த அதிமுக மாஜி அமைச்சர் காமராஜரின் அண்ணன் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீடு, அலுவலகம், செயற்பொறியாளர் வீடு ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் 22 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.73 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வருபவர் தீனதயாளன். இவர் தனது மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழ் வைப்பதற்காக காரைக்கால் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். இவர் காரைக்கால் கடற்கரையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். அங்கு, காரைக்கால் பொதுப்பணித்துறையில் கட்டிடம் மற்றும் சாலை பிரிவில் செயற்பொறியாளராக உள்ள சிதம்பரநாதன் மற்றும் ஒரு சில பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களுக்கு தலைமை பொறியாளர் திருமண பத்திரிகை வைத்து உள்ளார்.
அப்போது அங்கிருந்த ஒரு ஒப்பந்ததாரர், தலைமை பொறியாளர் தீனதயாளன் முன்னிலையில் செயற்பொறியாளர் சிதம்பரநாதனிடம் ரூ.2 லட்சம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். இதுகுறித்து முன்கூட்டியே தகவலறிந்து சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் பொதுப்பணித்துறை தங்கும் விடுதியை சுற்றிவளைத்து, அதிரடியாக அறைக்குள் நுழைந்து லஞ்சமாக வழங்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர்கள் சிதம்பரநாதன், மகேஷ் மற்றும் உதவி பொறியாளர்கள் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் காரைக்காலில் ரூ.7 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரம் சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள விரைவான அனுமதி வழங்க 1 சதவீத கமிஷன் அடிப்படையில் ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தலைமை பொறியாளர் முன்னிலையில் செயற்பொறியாளர் சிதம்பரநாதன் ரூ.2 லட்சத்தை லஞ்சமாக பெற்றது தெரியவந்தது. உடனே 3 பேரையும் பிடித்து ரூ.2 லட்சம் லஞ்சப்பணம், மேலும் ஒப்பந்ததாரர் காரில் இருந்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், ஒப்பந்ததாரர் இளமுருகன் ஆகியோரை கைது செய்தனர். கைதான இளமுருகன் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் ஆவார். இதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள மாநில பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் வீடு மற்றும் அலுவலகம், காரைக்காலில் உள்ள செயற்பொறியாளர் சிதம்பரநாதன் வீடு ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் தலைமைப்பொறியாளர் தீனதயாளன் வீட்டில் இருந்து ரூ.63 லட்சம், செயற்பொறியாளர் சிதம்பரநாதன் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் என மொத்தம் ரூ.73 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், புதுச்சேரி புஸ்சி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உள்ள தீனதயாளன் அறைக்கு சிபிஐ டிஎஸ்பி ஜெயசீலன் சீல் வைத்தார். தொடர்ந்து கைதான 3 பேரையும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று மதியம் வந்தனர். அங்கு சீல் வைக்கப்பட்ட அறையின் கதவை திறந்து 2வது நாளாக அதிகாரிகள் சோதனை செய்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில், அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதையடுத்து அதிகாரிகள் 2 பைகளில் அந்த ஆவணங்களை எடுத்து சென்றனர். நேற்று முன்தினம் மதியம் முதல் நேற்று பிற்பகல் வரை 22 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்றுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* அதிகாரி சிக்குவதற்கு காரணம் என்ன?
காரைக்காலில் ரூ.9 கோடி செலவில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் நடந்து வந்த சாலைப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வந்தததாகவும், தரமற்ற சாலைகள் குறித்தும் புகார் எழுந்துள்ளது. மேலும் உள்ளூர் ஒப்பந்ததார்களை ஒதுக்கி கமிஷன் அதிகம் தரும் வெளியூர் ஒப்பந்தரார்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து அவ்வப்போது உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் தலைமை பொறியாளரிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அப்படியே டெண்டர் விட்டாலும் சிண்டிகேட் அமைத்து வேறு யாரும் பணியை எடுக்கமுடியாமல் தமிழகத்தை சேர்ந்த ஒரே ஒப்பந்ததாரருக்கு அனைத்து பணிகளும் சென்றது கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் உள்ள பலரும் தலைமை பொறியாளர் பதவிக்கு ஆசைப்பட்ட நிலையில், இதனையெல்லாம் மீறி தனது செல்வாக்கால் தலைமை பொறியாளர் பதவியில் அமர்ந்த தீனதயாளன் மீது சக அதிகாரிகளுக்கும் உள்ளூர கோபம் இருந்துள்ளது. இதன்காரணமாக தலைமை பொறியாளரை லஞ்ச வழக்கில் சிக்க வைக்க நேரம் பார்த்து காத்திருந்த உள்ளூர் அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் சரியான நேரத்தில் அவரை முடித்துவிட்டதாக கூறுகின்றனர்.
The post ரூ.7 கோடி சாலை ஒப்பந்த பணிக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் அதிமுக மாஜி அமைச்சர் அண்ணன் மகன் கைது: அலுவலகம் வீடுகளில் 22 மணி நேரம் சிபிஐ சோதனை, ரூ.75 லட்சம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது appeared first on Dinakaran.