விரிவுப்படுத்தப்பட்ட ஒருகால பூஜைத் திட்டத் திருக்கோயில்களுக்கான ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: விரிவுப்படுத்தப்பட்ட ஒருகால பூஜைத் திட்டத் திருக்கோயில்களுக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.03.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள 17,000 திருக்கோயில்களுக்கான வைப்பு நிதியினை தலா 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்திட 85 கோடி ரூபாய் மற்றும் இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில் கூடுதலாக 1,000 திருக்கோயில்களுக்கு ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 25 கோடி ரூபாய், என மொத்தம் 110 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அதன் தலைமை நிதி அலுவலர் பீ. ஜமீலாவிடம் வழங்கினார். மேலும், விரிவுபடுத்தப்பட்ட 1,000 ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 அர்ச்சகர்களிடம் ஆணைகளை வழங்கினார்.2021 – 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “12,959 திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜைத் திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிலை நிதி ஏற்படுத்தப்படும்“ என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஒருகால பூஜை நடைபெறும் 12,959 திருக்கோயில்களுக்கு ஏற்கனவே வைப்பு நிதியாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசு மானியமாக ரூ.130 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டது. மேலும், 2022-2023 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 2,000 திருக்கோயில்களுக்கு ஒருகால பூஜை திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அரசு மானியமாக 40 கோடி ரூபாய்க்கான காசோலை மற்றும் 2023-2024 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 2,000 நிதி வசதியற்ற திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு அரசு மானியம் மற்றும் பொது நல நிதியாக ரூ.40 கோடிக்கான காசோலை முதலமைச்சரால் வழங்கப்பட்டன. 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், “ஒருகால பூசைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 17,000 திருக்கோயில்களின் வைப்புத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாண்டு 1000 நிதி வசதியற்ற திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.110 கோடி அரசு நிதியாக வழங்கப்படும். ஏற்கனவே, 17,000 திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித் தொகை ரூ.1000/- இவ்வாண்டு கூடுதலாக சேர்க்கப்படும் 1000 திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்படும்“என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள 17,000 திருக்கோயில்களுக்கு உயர்த்தப்பட்ட வைப்பு நிதிக்காக 85 கோடி ரூபாய், இத்திட்டத்தை விரிவுப்படுத்திடும் வகையில் 1,000 திருக்கோயில்களுக்கு வைப்பு நிதியாக 25 கோடி ரூபாய், என மொத்தம் அரசு மானியமாக 110 கோடி ரூபாய்க்கான காசோலையினை முதலமைச்சர் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அதன் தலைமை நிதி அலுவலர் அவர்களிடம் வழங்கினார். மேலும், விரிவுபடுத்தப்பட்ட ஒருகால பூஜைத் திட்டத் திருக்கோயில்களுக்கு அதற்கான ஆணைகளை அர்ச்சகர்களிடம் வழங்கினார்.
ஒரு கால பூஜைத் திட்டத் திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் பிள்ளைகளின் நலன்கருதி, அவர்களின் மேற்படிப்பிற்கு கல்வி உதவித்தொகையாக கடந்த 2 ஆண்டுகளில் 900 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் சி.பழனி, இ.ஆ.ப., இணை ஆணையர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post விரிவுப்படுத்தப்பட்ட ஒருகால பூஜைத் திட்டத் திருக்கோயில்களுக்கான ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: