மன்னார்காடு அருகே பரபரப்பு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை

*வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் மக்கள்

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பாலக்காடு மன்னார்க்காடு பாலக்காடு சாலையில் கரிம்பாவை அடுத்து மீன் வல்லம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இங்கு ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கல்லடிக்கோடன் மலையடிவாரம் மீன் வல்லம், கரிமலை, செருமலை ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று முகாமிட்டு மக்களை அச்சுறுத்தியும், தோட்டப்பயிர்களை நாசப்படுத்தி வந்தது.

இதனால் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் வாங்கவோ, தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் செல்லவோ முடியாமல் தவிக்கின்றனர்.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வு நேரங்களில் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

மீன் வல்லம் நீர்மின் நிலையம் அருகே காட்டு யானை நீர்வீழ்ச்சி அடிவார பகுதியில் சுகமான குளியல் போட்டு வருகிறது. தோட்டங்களில் புகுந்து உணவு வகை உட்கொண்டும் ஜாலியாக பட்டப்பகலில் ஊருக்குள் நடமாடியபடியும் உள்ளது. இதையடுத்து யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறு காட்டிற்குள் விட வேண்டும் என கிராம மக்கள் மன்னார்காடு வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து மன்னார்காடு வனக்காவலர்கள் இப்பகுதிகளில் முகாமிட்டு காட்டு யானையை பட்டாசுகள் வெடித்தும், டிரம்ஸ்கள் அடித்து சத்தம் செய்தும் காட்டிற்குள் விரட்டி வருகின்றனர்.
இருப்பினும் காட்டு யானை இரவு பகல் நேரங்களில் மீன் வல்லம் அடிவார கிராமங்களில் புகுந்து தோட்டப்பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

இதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே நடமாடமுடியாமல் பெரிதும் பரிதவித்து வருகின்றனர். பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்த நெல்லியாம்பதி தனியார் டீ எஸ்டேட்டில் சில்லிக்கொம்பன் என்கின்ற காட்டு யானை முகாமிட்டுள்ளது.

இதனால் டீ எஸ்டேட் தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்கு அச்சமடைந்து கடந்த சில நாட்களாகவே வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் தொழிலாளர்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.

The post மன்னார்காடு அருகே பரபரப்பு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை appeared first on Dinakaran.

Related Stories: