ஊட்டி : முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், யானை உட்பட பல்வேறு விலங்குகளும் பசுமையை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வட கிழக்கு பருவமழையும் பெய்வது வழக்கம்.
இவ்விரு பருவமழையும் குறித்த சமயத்தில் பெய்ததால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முதுமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளித்தது.
தற்போது வனங்கள் காய்ந்துள்ள நிலையில், காட்டு தீ ஏற்டும் அபாயம் நீடிக்கிறது. மேலும், முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாகவே ஊட்டி தேசிய மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்லும் நிலையில், ஏராளமான வாகனஙகள் இவ்வழித்தடம் வழியாக சென்று வருகின்றன.
அதேபோல, மசினகுடி முதல் முதுமலை வரையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. இதனால், இச்சாலையோரங்களில் கவுன்டர் பயர் மூலம் வனங்களில் காட்டு தீ ஏற்படாமல் பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், முதுமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் உள்ள புற்கள், செடி கொடிகள் காய்ந்த நிலையில், பசுமையின்றி பழுப்பு நிறத்தில் வனங்கள் காட்சியளிக்கிறது. மேலும், நீர் நிலைகளிலும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
இதனால், இங்குள்ள காட்டு யானைகளுக்கு போதிய பசுந்தீவனங்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றன.
யானைகள் உட்பட பெரும்பாலான வன விலங்குகள் பசுமையை தேடி, நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு இடம் பெயர துவங்கியுள்ளன.
The post முதுமலை புலிகள் காப்பக பகுதியில் வறட்சியால் பசுந்தீவனத்தை தேடி அலையும் வன விலங்குகள் appeared first on Dinakaran.