கச்சிராயபாளையம் அருகே ஏரி பாசன கால்வாய் உடைப்பால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

சின்னசேலம், டிச. 3: கச்சிராயபாளையம் அருகே ஏரி பாசன கால்வாய் உடைப்பால் சுமார் 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே கோமுகி அணை உள்ளது. இந்த கோமுகி அணையின் மூலம் சுமார் 10,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதாவது கள்ளக்குறிச்சி பகுதியில் கடத்தூர், நல்லாத்தூர், குதிரைசந்தல், காரனூர், உலகங்காத்தான், கச்சிராயபாளையம், வடக்கநந்தல், மாத்தூர், மாதவச்சேரி, செம்படாகுறிச்சி, க.அலம்பளம், சோமண்டார்குடி உள்ளிட்ட ஏரிகளும், சின்னசேலம் பகுதியில் தெங்கியாநத்தம், பைத்தந்துறை, புதூர், தென்செட்டியந்தல், நமசிவாயபுரம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ஏரிகளும் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரிகளுக்கு கோமுகி அணை பாசனத்துக்கு திறந்து விடும் போது பாசன கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.

அதைப்போல கோமுகி அணைக்கு பெஞ்சல் புயல் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் பாசன கால்வாய்களிலும் அதிகளவு நீர் சென்றது. அதைப்போல நல்லாத்தூர் ஏரியில் இருந்து குதிரைசந்தல் ஏரிக்கு செல்லும் பாசன கால்வாயில் இடையில் அதிகளவு நீர் சென்றதால் சுமார் 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கால்வாய் நீர் அருகில் இருந்த நெல் வயல்களில் புகுந்தது. இதனால் வயலில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. அதாவது நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளின் சுமார் 50 ஏக்கர் விவசாய நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய விவசாயிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் சின்னசேலம் வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக மக்காச்சோளம், மரவள்ளி கிழங்கு, வாழை, நெற்பயிர் போன்றவை பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் வேளாண் துறை அதிகாரிகள் இந்த பாதிப்பை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கச்சிராயபாளையம் அருகே ஏரி பாசன கால்வாய் உடைப்பால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின appeared first on Dinakaran.

Related Stories: