வலங்கைமான், டிச. 12: அமுத கரைசலை பயன்படுத்துவதன் மூலம் மண்ணை வளமாக்கலாமென முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பயிர்களின் வளர்ச்சி மற்றும் நல்ல மகசூல்பெற ஊக்க சத்துவாக அமிர்தகரைசல் பயன்படுகிறது. நாட்டு பசுஞ்சாணம் 10 கிலோ நாட்டுப்பசு கோமியம் 10 லிட்டர், கருப்பட்டி (அ) கரும்பு வெல்லம் 250 கிராம், தண்ணீர் 200 லிட்டர் ஆகிய பொருட்கள் அமுத கரைசல் தயார் செய்வதற்கு தேவைப்படுகிறது. முதலில் சாணம் மற்றும் நாட்டுப்பசு கோமியம் (பசுஞ்சாணம் புதியதாக இருந்தல் அவசியம், கோமியம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) இவற்றை ஒரு வாளியில் (அ) ஏதாவது ஒரு கலனில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் குறிப்பிட்ட அளவு வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இந்த கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்கவேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசலே அமிர்த கரைசலாகும் ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்து விடலாம். இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணிநேரத்தில் நுண்ணுயிரிகள் பெருகும். பயிர்கள் நோய், நொடியில்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலை கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாக காணப்பட்டால் வாரம் ஒரு முறை கூட கொடுக்கலாம். தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் பாசன நீருடன் கலந்துவிடலாம். இதனால் பயிர்களின் வளர்ச்சி சீராக இருக்கும் என முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
The post அமிர்த கரைசலால் மண்ணை வளமாக்கலாம் முன்னோடி விவசாயி ஆலோசனை appeared first on Dinakaran.