அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 95% பணிகள் நிறைவு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 95 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (31.05.2023) ஆணையர் அலுவலகத்தில் 2021- 2022 மற்றும் 2022-2023 ஆகிய நிதியாண்டுகளில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்தும், 2023-2024 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளை நிறைவேற்றிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு; இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கைகளின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 23 –வது ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

கடந்த 3 சட்டமன்ற மானியக் கோரிக்கைகளின் போது 526 அறிவிப்புகளின் மூலம் 8,015 பணிகளை மேற்கொள்ள அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 2021- 2022 மற்றும் 2022-2023 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகளை விரைந்து நிறைவேற்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,000 ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் இதுவரை 197 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருகால பூஜை திட்டத்தில் திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்டு வந்த வைப்பு நிதி ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தாண்டு இத்திட்டத்திற்காக 200 திருக்கோயில்களை தேர்வு செய்வதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு 2,500 திருக்கோயில்களை தேர்வு செய்து வழங்கிட இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்ப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் நடைபெற்று வரும் அன்னதானத் திட்டம் மற்றும் முழு நேர அன்னதானத் திட்டம் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்திடவும், கடந்தாண்டு திருக்கோயில்களின் சார்பில் 500 இணைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் செலவில் திருமணம் நடத்தியதை போன்று இந்தாண்டு 600 இணைகளுக்கு திருமணம் நடத்திட தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதோடு, இத்திருமணங்களின் தொடக்க நிகழ்வை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடத்திடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இராமேசுவரம் – காசி ஆன்மிக பயணத்திற்கு இந்தாண்டு 300 பக்தர்கள் அழைத்து செல்லும் வகையில் பயணத்திட்டம் வகுத்திட அறிவுறுத்தப்பட்டது.

திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் தொடர்ந்து விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ. 4,505 கோடி மதிப்பீட்டிலான 4,802 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. திருக்கோயில் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் இதுவரை 1,16,886 ஏக்கர் நிலங்கள் அளவிடப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டு பாதுக்காக்கப்பட்டுள்ளன. திருக்கோயில்களின் குடமுழுக்கை பொறுத்தளவில் இதுவரை 709 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளின் முன்னேற்றம் குறித்து 3 கட்டங்களாக 7 மண்டலங்களை இணைத்து ஆய்வுக் கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, துறை அலுவலர்களுக்கு குறித்த காலத்தில் உரிய பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

12 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாத நிலையில் கடந்தாண்டு 146 அலுவலர்களுக்கு உதவி ஆணையர், துணை ஆணையர், இணை ஆணையர் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 23 அலுவலர்களுக்கு இணை ஆணையர் நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் அவர்தம் விருப்பத்திற்கேற்போல் பணியிட மாறுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் (Master Plan) தயார் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திருக்கோயிலுக்கு கூடுதலான இடம் தேவை என்பதை கருத்தில்கொண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் 5.77 ஏக்கர் நிலம் உரிமை மாற்றம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தொட்டதெல்லாம் துலங்கும், கைப்பட்டதெல்லாம் விளங்கும். அந்த வகையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்து, பல முதலீட்டு ஒப்பந்தங்கள் மூலம் எண்ணற்ற நபர்களுக்கு பணி வாய்ப்பினை வழங்கும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 95% பணிகள் நிறைவு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: