விளைநிலங்களில் புகுந்து மான்கள் அட்டகாசம் கடையம் அருகே நெற்பயிர்கள் நாசம்

*விவசாயிகள் கவலை

கடையம் : கடையம் அருகே விளைநிலங்களில் புகுந்து மான்கள் அட்டகாசம் செய்ததால் 40 நாட்களான நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடையம் அருகே செங்கானூர் பகுதியில் உள்ள பொத்தையில் மான்கள் தற்போது முகாமிட்டுள்ளன. இவை கடந்த சில நாட்களாக அருகேயுள்ள விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இதனால் கருத்தப்பிள்ளையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கமலதாஸ், ஆஞ்சல், இந்நாசி முத்து ஆகியோர் நடவு செய்த 40 நாட்களான நெற்பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் பயிர்கள் முழுமையாக அழிந்து வருவதால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சேதமடைந்த விளைநிலங்களை வேளாண், வருவாய் மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டு உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் விளைநிலங்களில் புகுவதை தடுக்க பொத்தையில் முகாமிட்டுள்ள மான்களை அருகேயுள்ள வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விரட்டி அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடையம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அருகே அமைந்துள்ளதால், வனவிலங்குகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் புகுவது தொடர் பிரச்னையாக உள்ளது.

இதனால் எங்கள் கடின உழைப்பால் வளர்த்த பயிர்கள் இப்படி அழிவதைப் பார்க்க முடியவில்லை இதுபோன்ற சம்பவங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. எனவே வனத்துறையினர் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ என்றனர்.

Related Stories: