திண்டுக்கல்: பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, இடது பிரதான கால்வாயின் (புதிய ஆயக்கட்டு) புன்செய் பாசனப்பரப்பில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்களுக்காக 13.01.2026 முதல் 11.02.2026 வரை 30 நாட்களில் முதல் 5 நாட்களுக்கு, வினாடிக்கு 70 கன அடி வீதம் 30.24 மில்லியன் கன அடியும், அடுத்த 25 நாட்களுக்கு, வினாடிக்கு 20 கன அடி வீதம் 43.20 மில்லியன் கன அடியும் ஆகமொத்தம் 73.44 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் , திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள பெரியம்மாபட்டி, இரவிமங்கலம், தாதநாயக்கன்பட்டி (தெ), நெய்க்காரபட்டி, சி.கலையம் புத்தூர், பெத்தநாயக்கன்பட்டி, சுக்கமநாயக்கன் பட்டி, மானூர், தாதநாயக்கன்பட்டி (வ), சித்திரைக்குளம், தாளையூத்து, கொழுமங்கொண்டான், கோரிக்கடவு, கோவிலம்மாபட்டி, மேல்கரைபட்டி, அக்கரைபட்டி ஆகிய கிராமங்களிலுள்ள 9600 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
