காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க தடை; சென்னையில் 16,000 போலீஸ் பாதுகாப்பு: காவல்துறை தகவல்

 

சென்னை: காணும் பொங்கலை ஒட்டி சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஜனவரி 17ம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் 16,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை காவல் துறை மூலம் விரிவான தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1. மெரினா கடற்கரை (உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை)
சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் (Temporary Mini Control room) அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும், அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இவை தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

2. கடற்கரை மணற்பரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர். அவர்களுக்கு வான்தந்தி கருவி (Walky Talky), மெகா போன், பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு, வாட்சப் குழு (WhatsApp Group) அமைக்கப்பட்டும், பைனாகுலர் மூலம் காவலர்கள் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், கட்டுப்பாட்டறைக்கு வான் தந்தி கருவி மூலமும் மற்றும் வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள். மேலும், 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மேலும், குதிரைப்படையினர் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய 3 All Terrain Vehicle மூலம் காவல் ஆளினர்களால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்படுவர்.
சென்னை பெருநகர காவல் மற்றும் கடலோர காவல் குழுமத்தின், கடற்கரை உயிர் காக்கும் பிரிவின் (Anti Drowning team) 85 காவல் ஆளிநர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் தீவிரமாக கண்காணிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

3. பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை
பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை, 3 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவல் ஆளிநர்களால் பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், குதிரைப்படை மற்றும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து சுற்றிவரப்பட்டு, கண்காணிக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பாதுகாப்பு குறித்த அறிவுரைகளும் வழங்கப்படும். 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 1 தீயணைப்பு வாகனம், அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் மற்றும் மோட்டார் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

4.முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
(i) குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்கு காவல் அடையாள அட்டை:
கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட கைகளில் கட்டப்படும் பேண்ட், அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் வைக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களிடம் விபரங்கள் பெறப்பட்டு, மேற்படி பிரத்யேக அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர். ஆகவே, குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் (Wrist ID Band) அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவர்.

(ii) டிரோன் கேமராக்கள்:
மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் (Drone Camera) மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படும். மேலும், அதிக திறன் கொண்ட டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு அவைகள் மூலம் கடலோர மணற்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும்.

5. இதர பாதுகாப்பு ஏற்பாடுகள்:
காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழி பூங்கா உள்ளிட்ட கேளிக்கை பூங்காக்கள் (Amusement Park) மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் காணும் பொங்கலை கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வணிக வளாகங்கள் (Malls) மற்றும் திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை காவல் துறை சார்பில் முக்கியமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களில் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, மதுபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

6. சென்னை போக்குவரத்து காவல்
காணும் பொங்கலன்று சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஒட்டிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள். இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை. துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, GST ரோடு மற்றும் இதர சாலைகளில் இருசக்கர வாகன பந்தயம் (Bike Race) தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். சென்னை காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடித்து மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டள்ளது.

Related Stories: