கொல்கத்தா: கொல்கத்தாவில் மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைக்கும்போது ஆளுநரின் கையில் இருந்த துப்பாக்கியிலிருந்து துகள்கள் வெளியேறிய விவகாரத்தில், சதி ஏதேனும் உள்ளதா என விசாரிக்க உயர் மட்டக் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ரெட் ரோட்டில் கடந்த 21ம் தேதி டாடா ஸ்டீல் உலக 25கே மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், போட்டியைத் தொடங்கி வைக்கும் துப்பாக்கியை இயக்கியபோது, அதிலிருந்து சிறிய துகள்கள் மற்றும் சிதறல்கள் வெளியேறியது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், ஆளுநர் துப்பாக்கியை வானத்தை நோக்கிக் காட்டாமல் முகத்திற்கு நேராக வைத்துச் சுட்டதாகவும், அவரது பாதுகாப்பு அதிகாரி கையை உயர்த்த முயன்றதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதிர்ஷ்டவசமாக இதில் ஆளுநருக்கோ அல்லது அங்கிருந்தவர்களுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்நிலையில், இது வெறும் உபகரணக் கோளாறா அல்லது தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சதிச்செயலா? என்பது குறித்து விசாரிக்க ஆளுநர் நேற்று உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை தரப்பில், ‘பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டன.
இது முழுக்க முழுக்க உபகரணக் கோளாறு தான்’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கிய துப்பாக்கி முன்னரே பரிசோதிக்கப்பட்டதா? அல்லது பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடு இருந்ததா? என்பது குறித்தும் விசாரிக்கப்படவுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆளுநருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு அதிகாரி (ஏடிசி) மேஜர் நிகில் குமார் அளித்த அறிக்கையில், ‘துப்பாக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
