ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; அசாமில் வெடித்த கலவரத்தில் 2 பேர் பலி: போலீஸ் டிஜிபி உட்பட 50 பேர் படுகாயம்

 

கவுகாத்தி: அசாமில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய போராட்டம் வன்முறையாக மாறியதில் 2 பேர் பலியான நிலையில் இணைய சேவை முடக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அசாமின் கர்பி அங்லாங் மற்றும் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டங்களில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளியாட்களை வெளியேற்றக் கோரி, பழங்குடியின அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த 22ம் தேதி டோங்காமோகமில் கர்பி அங்லாங் தன்னாட்சி கவுன்சிலின் தலைமை நிர்வாக உறுப்பினர் துலிராம் ரோங்ஹாங்கின் பூர்வீக வீடு போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கெரோனியில் நேற்று நடந்த வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதிக் திமுங் என்ற பழங்குடியின நபர் உயிரிழந்தார். மேலும் சுரேஷ் டே என்ற 25 வயது மாற்றுத்திறனாளி இளைஞர் ஒரு கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டதில் உடல் கருகி பலியானார். இந்த மோதலில் மாநில டிஜிபி ஹர்மீத் சிங் மற்றும் ஐஜிபி அகிலேஷ் குமார் சிங் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். வதந்திகள் பரவுவதைத் தடுக்க இரு மாவட்டங்களிலும் இணைய சேவை காலவரையன்றி முடக்கப்பட்டுள்ளதுடன், இரவு நேர ஊரடங்கு மற்றும் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவைச் சேர்ந்த அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ‘மாநிலத்தில் நிலவும் சூழல் மிகவும் பதற்றமாக உள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளதுடன், பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் ரனோஜ் பெகுவை அனுப்பி வைத்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மருத்துவ சிகிச்சைக்காக போலீசார் அழைத்துச் சென்றதை, அவர்கள் கைது செய்யப்பட்டதாக நினைத்து பரவிய வதந்தியே தற்போதைய வன்முறைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

Related Stories: